April 4, 2017 தண்டோரா குழு
உணவு என்பது ஒருவருடைய தனிப்பட்ட தேர்வாகும். அதே சமயத்தில் அரசியலமைப்பில் சில கட்டுப்பாடுகள் உண்டு. மக்கள் அனைவரும் அதனை மதிக்க வேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிப்பரப்பு அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
கேரளா மாநிலத்தின் மல்லப்புரத்தில் வரவிருக்கும் இடைதேர்தலில், பா.ஜ.க கட்சி வெற்றி பெற்றால், சுத்தமான இறைச்சி கூடத்திலிருந்து மாட்டிறைச்சி வழங்கப்படும் என்று அக்கட்சியின் வேட்பாளர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
ஹைதராபாத்தில் நிகிழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வெங்கையா நாயுடுவிடம் இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு “உணவு என்பது ஒருவருடைய தனிப்பட்ட தேர்வாகும். அதே சமயத்தில் அரசியலமைப்பில் சில கட்டுப்பாடுகள் உண்டு. மக்கள் அனைவரும் மதிக்க வேண்டிய சில காரியங்களும் உண்டு.
அரசியலமைப்பின்படி, மாநிலங்களில் தடைசெய்யப்பட்டதை கடைப்பிடிப்பது அவசியம். மாநிலத்தின் சட்டங்களை பின்பற்றுங்கள். நான் அசைவ உணவுகளை உண்பதில் தீவிரம் கொண்டவன். தொடர்ந்து அதே போலவே இருப்பேன்” என்றார் வெங்கையா நாயுடு .
பா.ஜ.க கட்சி ஆளும் மாநிலங்களில் மாட்டிறைச்சி உண்பதை எதிர்த்து பல சட்டங்கள் கொண்டு வருகிற நிலையில், வெங்கைய்யா நாயுவிடமிருந்து இந்த அறிக்கை வந்துள்ளது பலருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது. உத்தரபிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சட்டவிரோதமாக செயல்படும் இறைச்சி கூடங்களுக்கு எதிராக களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.