May 22, 2017 தண்டோரா குழு
கர்நாடக மாநில பாரதிய ஜனதா தலைவர் எடியூரப்பா உணவகத்தில் இருந்து உணவு வரவழைத்து தலித் இல்லத்தில் வைத்து சாப்பிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா பாஜக தலைவர் எடியூரப்பா சமீபத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது கர்நாடக மாநிலம் துமாகூர் மாவட்டத்தில் தலித் தொண்டர் வீட்டில் உணவு சாப்பிட்டார். அவர் சாப்பிடும் போது புகைப்படமும் எடுக்கப்பட்டது.
இந்நிலையில், எடியூரப்பா தலித் தொண்டர் வீட்டிற்கு சென்ற போது அவருக்கு என்று தனியாக உயர்தர ஓட்டலில் இருந்து வாங்கி வரப்பட்ட இட்லி தான் பரிமாறப்பட்டது என்ற புகார் தற்போது எழுத்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதையடுத்து தலித்துகளை அவமதித்ததாக எடியூரப்பா மீதும் மற்ற பாரதிய ஜனதா நிர்வாகிகள் மீது புகார் பதியப்பட்டுள்ளது.
எனினும் அரசியல் உள்நோக்கத்தோடு தன் மீது எதிர்க்கட்சிகள் புகார் கூறுவதாக எடியூரப்பா கூறியுள்ளார். 2018ஆம் ஆண்டு கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அம்மாநில அரசியல் தலைவர்கள் மக்களிடம் நற்பெயரை பெற்று வரும் நிலையில் எடியூரப்பா மீது தலித்துகளை அவமதித்ததாக எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.