April 4, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் தரமற்ற, கலப்பட உணவு பொருட்கள் தொடர்பாக புகார் அளிக்க வாட்ஸ் அப் எண் வெளியிடப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில் உள்ள உணவகங்கள், அங்கன்வாடி மையங்கள், கோயில்கள் என அனைத்து இடங்களிலும் தரமான உணவு வழங்குவதை மாவட்ட உணவுத்துறை அதிகாரிகள் உறுதி செய்து வருகின்றனர்.
அதன்படி, மாவட்டத்தில் உள்ள 354 நிறுவனங்களுக்கு தரமான உணவு தயாரிப்பதற்கான சான்று வழங்கப்பட்டுள்ளது. ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை சேகரித்து அதில் இருந்து மறு சுழற்சி முறையில் பயோ டீசல், சோப் தயாரிக்க மறுசுழற்சி செய்த ஆயிலை பயன்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டம் தொடர்பாக பொதுமக்கள், உணவகங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனை கோவை மாவட்ட ஓட்டல் உரிமையாளர் சங்கங்கள், பேக்கரி உரிமையாளர் சங்கங்கள், உறுப்பு நிறுவனங்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெறும் வகையில் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் உள்ளனர்.
இவர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும், ஆர்.எஸ்.புரம், வடவள்ளி பகுதிகளில் உள்ள உழவர் சந்தைகளுக்கு சுத்தமான காய்கறிகள் மற்றும் பிரஷ் புரூட் மார்க்கெட் தரச்சான்று பெற நடவடிக்கை எடுக்க வேளாண்மை வணிக துணை இயக்குனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொதுமக்கள் தரக்குறைவான உணவு, கலப்பட டீத்தூள், கலப்பட எண்ணெய், அளவுக்கு அதிகமான நிறமி கலந்த உணவுகள், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள், பிளாஸ்டிக் தொடர்பான புகார்களை 94440-42322 என்ற வாட்ஸ்அப் புகார் எண்ணில் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.