May 2, 2017 தண்டோரா குழு
உதகையில் பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் கழிவு நீர் உட்புகுந்தது. பல நாட்களாக சாக்கடை சுத்தம் செய்யப்படாததால் தான் கழிவு நீர் உட்புகுந்ததாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உதகையில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் உதகையில் 2 மணிநேரம் கன மழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் க்ரீன் பீல்டு பகுதி மிகவும் பாதிக்கப்பட்டது. மழையால் அப்பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் கழிவு நீர் உட்புகுந்தது.
இதனை சரிசெய்யுமாறு அப்பகுதி மக்கள் உதகை நகராட்சியிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் புகார் கொடுத்தும் நகராட்சி நிர்வாகம் சரி செய்யாமல் கால தாமதம் செய்து வந்நதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை அப்பகுதி மக்கள் கழிவு நீர் கால்வாயை சரி செய்ய கோரி எட்டின்ஸ் சாலையில் மறியல் செய்தனர். தகவல் கிடைத்து அங்கு வந்த காவல் துறையினர் அப்பகுதி மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனையடுத்து நகராட்சி அலுவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு உடனடியாக சரி செய்ய நகராட்சி பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இச்சம்பவத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.