April 28, 2016 தண்டோரா குழு
செகன்றாபாத்தில் சுமார் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் காரில் பிணமாகக் கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த காவல் துறையினர் அந்த இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி விசாரணையை முடிக்கிவிட்டனர்.
பெயர் அறியப்படாத அந்த நபர் அதிக வெப்பத்தின் காரணமாக இறந்திருக்கலாம் என்று தான் முதலில் காவல் துறையினர் நினைத்தனர்.
ஆனால் கடுமையான வெயிலில் அவர் ஏன் காரில் அமர்ந்திருந்தார் என்ற கேள்வி எழுந்தது. இதற்கு விடை காண காவல் துறையினர் அருகில் உள்ள ஒரு கடையின் CCTV கேமராவில் பதிவாகியிருந்த நிகழ்வுகளை ஆராய்ந்தனர்.
அப்போது தான் அதிர்ச்சிகரமான அந்த நிகழ்வு நடந்தது தெரிய வந்தது.
கேமராவில் பதிவான கிளிப்பிங், இறந்த மனிதர் முன்னதாக கார் ஓட்டி வருவதும் எதிர்பாராத விதமாக மற்றொரு கார் மீது மோதுவதும் பதிவாகி இருந்தது.
இதில் அந்த மற்றொரு காரின் மீது சிறிய கீறல் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த காரில் பயணம் செய்த நான்கு நபர்கள் காரில் இருந்து இறங்கி இந்த மனிதருடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதும் பதிவாகி இருந்தது.
இறந்த மனிதர் முன்னதாக அவர்களிடம், சமரசம் பேச முயற்சிப்பதும், ஆனால் காரில் ஏற்பட்ட சிறு கீறலை பொருத்துக் கொள்ளாமல் அதற்காகத் தண்டிக்க நினைத்து அந்த மனிதரைத் தோப்புக்கரணம் போடச் செய்ததும் அந்த கேமராவில் பதிவாகி இருந்தது. மேலும், கிளம்பும்முன் அவரது பணப்பையையும் பிடுங்கிச் சென்றதும் பதிவில் காணப்பட்டது.
இதனால் மனம் உடைந்த அவர், காரில் அமர்ந்து சற்று இளைப்பாறி பின் காரை ஓட்டிச் செல்ல நினைத்து இருக்கலாம். ஆனால் வெயிலில் தோப்புக்கரணம் போட்டதாலும், பணப்பையை பறிகொடுத்ததாலும் மனச்சோர்வு ஏற்பட்டு இருக்கலாம்.
இந்த அதிர்ச்சியில் அவரது உயிர் பிரிந்து இருக்கலாம் எனக் காவல்துறையினர் சந்தேகம் கொண்டனர். இதையடுத்து, காவல் துறையினர் உடன் களத்தில் இறங்கி அந்த மனிதரின் இறப்பிற்குக் காரணமான நான்கு பேரில் மூன்று பேரை கைது செய்தனர். மேலும் ஒருரை தேடும் முயற்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே இறந்த அந்த மனிதர் யார் என்ற விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது.