February 14, 2017 தண்டோரா குழு
“தமிழக மக்களுக்கு நிலையான ஆட்சியைkd கொண்டு வர சட்டப் பேரவை உறுப்பினர்கள் தீர்க்கமான, தெளிவான முடிவை எடுக்க வேண்டும்” என்று பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியதாவது;
“சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஊழல் ஓழிப்பின் முதல்படியாகும். இந்தத் தீர்ப்பின் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டுள்ளது.
பாஜக தமிழக அரசியலில் காலுன்ற ஆரம்பித்துவிட்டது என்பது தமிழக அரசியல் கட்சிகளின் எதிர்ப்பைப் பார்த்தால் தெரிகின்றது. புறவாசல் வழியாக ஆட்சி அமைக்க வேண்டிய நிலையில் பா.ஜ.க. இல்லை. நாங்கள் நேர்மையாக, நேர்வாசல் வழியாக ஆட்சியைப் பிடிப்போம். அதற்கான காலம் விரைவில் வரும்.
சட்டப் பேரவை அ.தி.மு.க. உறுப்பினர்கள் தங்கள் தலைவரை சுதந்திரமான முறையில் தேர்வு செய்ய வேண்டும். தமிழக அமைச்சர் “மாஃபா” பாண்டியராஜன் மக்களின் கருத்துகளைக் கேட்டு முடிவெடுத்ததைப் போல அ.தி.மு.க.வைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களும் மக்களின் கருத்துகளைக் கேட்டு முடிவெடுக்க வேண்டும்.
தமிழக மக்களுக்கு நிலையான ஆட்சியைக் கொண்டு வர சட்டப்பேரவை உறுப்பினர்கள் தீர்க்கமான, தெளிவான முடிவை எடுக்க வேண்டும். தண்டனைக்கு உள்ளானவர்களின் நிழலோ, சாயலோ தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடாது”
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக் கொண்டார்.