September 23, 2023 தண்டோரா குழு
கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் சர்வதேச தரத்திலான ஸ்ரீ ‘கிருஷ்ணா விளையாட்டு அரங்கை இன்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மற்றும் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் துவக்கி வைத்தார்.
சர்வதேச தரத்திலான ஸ்ரீ கிருஷ்ணா விளையாட்டு அரங்கம் 2000 பார்வையாளர்கள் அமர்ந்து விளையாட்டுகளைகாணும் வண்ணம் உருவாக்கப்பட்ட அரங்கமாகும்.மிக முக்கிய விருந்தினருக்கான பார்வையாளர் மாடத்துடன் கட்டப்பட்ட இந்த விளையாட்டு அரங்கம் 698 சதுரமீட்டர் அளவில் பரந்து விரிந்து இருக்கிறது. சுமார் 18 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்த விளையாட்டுஅரங்கில் இரண்டு கூடைப்பந்து மைதானங்களும், செயற்கை தரையுடன் ஒரு கால்பந்து மைதானமும், இரண்டுகைப்பந்து மைதானங்களும்,இரண்டு கிரிக்கெட் பயிற்சி தளங்களும் 400 மீட்டர் நீளமுள்ள எட்டு வழி செயற்கை ஓடு தளத்துடன் அமைந்துள்ளது.
விளையாட்டு அரங்கினை சுற்றிலும் பசும்புல் வெளிகளிடையே அமைக்கப்பட்ட பார்வையாளர்கள் இருக்கையில்இருந்து விளையாட்டைப் பார்ப்பது ஒரு பரவசமான அனுபவமாக மாணவர்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
மிக உயர் மின் கோபுரங்களில் இருந்து இரவை பகலாக்கும் ஒளி வெள்ளத்துடன் சர்வதேச தரத்திலான இந்தவிளையாட்டு அரங்கம், இக்கல்லூரி மாணவ மாணவியர்களை துடிப்பான விளையாட்டு வீரர்களாக ஆக்குவதோடு மட்டுமல்லாமல் அவர்களை மாநில அளவிலும் தேசிய மற்றும் சர்வதேச அளவிலும் விளையாட்டு சாதனையாளர்களாக உருவாக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
நிகழ்ச்சியில் S. மலர்விழி பேசுகையில்,
இது ஒரு நெடுநாள் கனவு இன்று நிஜமாகி உள்ளது என்றார். மேலும் இதைமத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் அவர்கள் துவக்கி வைத்தது மிகுந்த மகிழ்ச்சியை தருவதாக கூறினார்.
அமைச்சர் பேசுகையில்,
இது போன்ற ஒரு விளையாட்டு மைதானம் மற்றும் விளையாட்டு உள்கட்டமைப்பு ஆகியவற்றை ஒரு கல்வி நிறுவனத்தில் பார்ப்பது அரிது எனவும், இது போன்ற ஸ்டேடியமை மாணவர்களுக்கு வழங்கியதன் மூலம் ஶ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைமைக்கு விளையாட்டை, விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் உள்ள ஆர்வத்தை காணமுடிகிறது என்றார்.
மேலும் கேலோ இந்தியா யூனிவர்சிட்டி கேம்ஸ் விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்துகையில் அதில் சில விளையாட்டு பிரிவுகளில் சில போட்டிகளை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்டேடியத்தில் நடத்த நிச்சயமாக முயற்சிகள் எடுக்கப்படும் என்றுஉறுதியாக கூறினார்.