December 18, 2021 தண்டோரா குழு
உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் சார்பில் விருதுகள் வழங்குதல் மற்றும் நூல் வெளியீட்டு விழா இன்று டாக்டர்என்.ஜி.பி.கலையரங்கத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் டாக்டர் என்.ஜி.பி.கல்விக் குழுமங்களின் செயலர் மருத்துவர் தவமணிதேவி பழனிசாமி வரவேற்புரை வழங்கி தொடங்கி வைத்தார். உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி இவ்விழாவிற்கு தலைமையேற்று நூல்களை வெளியிட்டுச் சிறப்புச் செய்தார். உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் செயலர் முனைவர் சிற்பி பாலசுப்ரமணியம் அவர்கள் விருது பெரும் விருதாளர்களைப் பற்றிய அறிமுகவுரையாற்றிச் சிறப்பித்தார்.
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் மேனாள் இயக்குனர் பத்மஸ்ரீ முனைவர் மயில்சாமி அண்ணாதுரை விருதுகளை வழங்கினார். உ.வே.சா. தமிழறிஞர் விருது முனைவர் இ.சுந்தரமூர்த்தி அவர்களுக்கும், பெரியசாமித்தூரன் தமிழ்ப் படைப்பாளர் விருது எழுத்தாளர் ச.பாலமுருகன் அவர்களுக்கும், டாக்டர் நல்ல பழனிசாமி பிறதுறைத் தமிழ்த் தொண்டர் விருது முனைவர் சா.பாலுசாமி அவர்களுக்கும் வழங்கப்பட்டது.
சிறப்பு விருதுகள் பேராசிரியர் ப.அருளி, எழுத்தாளர் சூர்யகாந்தன், எழுத்தாளர் தமிழ் மகன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. மருத்துவர் க.இராஜேந்திரன் எழுதிய தாய்-சேய்க்கான சத்தான உணவுகள் நூலை மருத்துவர் செ.சதாசிவம் அறிமுகம் செய்தார். முனைவர் பெ.இரா.முத்துசாமி இளைஞர்களுக்கான வாழ்க்கைத் திறன்கள் நூலை அறிமுகம் செய்தார். இயகாகோ என்.சுப்ரமணியம் தமிழோசை மாணவர் இதழை அறிமுகம் செய்தார்.
முனைவர் இ.சுந்தரமூர்த்தி, எழுத்தாளர் ச.பாலமுருகன், முனைவர் சா.பாலுசாமி ஆகியோர் மகிழ்வுரை வழங்கினார்கள். உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் மதியுரைஞர் முனைவர் பெ.இரா.முத்துசாமி நன்றியுரை வழங்கினார்.