December 19, 2022 தண்டோரா குழு
கத்தாரில் நேற்று நடைபெற்ற உலக கோப்பை இறுதி போட்டியை சத்குரு நேரில் சென்று பார்வையிட்டார். மிகவும் விறு விறுப்பாக சென்ற இறுதிப் போட்டியில் மிகத் திறமையாக விளையாடிய இரு அணிகளுக்கும் சத்குரு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“அற்புதமான இறுதிச்சுற்று. இது கால்பந்துக்கு கிடைத்துள்ள வெற்றி! உண்மையிலேயே மிகத் திறமையாக விளையாடி அசத்திய அர்ஜென்டினா & பிரான்சு அணிகளுக்கு பாராட்டுகள்” என பதிவிட்டுள்ளார். பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத இந்தப் போட்டியில் அர்ஜென்டினா அணி ‘பெனால்டி ஹூட் அவுட்டில்’ 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தியது.
உலக அளவில் அதிகப்படியான விளையாட்டு ரசிகர்களால் கொண்டாடப்படும் உலக கோப்பை கால்பந்து நடைபெற்ற சமயத்தில், ‘மண் காப்போம்’இயக்கம் குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்தும் செயலில் சத்குரு ஈடுப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்காக அவர் #ScoreforSoil என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை அவர் தொடங்கினார். இதையடுத்து ஏராளமானோர் ‘மண் காப்போம்’ இயக்கத்திற்கு தங்களது ஆதரவை வெளிக்காட்டும் விதமாக, தங்களுடைய சிறப்பான கால்பந்து ஆட்டத்தை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர்.
உலகளவில் விவசாய நிலங்களில் கரிம சத்தின் அளவை குறைந்தப்பட்சம் 3 முதல் 6 சதவீதமாக அதிகரிக்க தேவையான சட்டங்களை அந்தந்த நாடுகள் உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்பதே ‘மண் காப்போம்’ இயக்கத்தின் பிரதான குறிக்கோள் ஆகும்.