April 17, 2017 தண்டோரா குழு
நியூசிலாந்து நாட்டில் நடைபெறவிருக்கும் உலக மாஸ்டர் கேம்ஸ் போட்டியின் ஒரு பிரிவான நீச்சல் போட்டிக்கு ஹைதராபாத் நகரை சேர்ந்த முதியவர் தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.
பொதுவாக 82 வயது முதியவர்கள் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்வதை தான் அதிகம் விரும்புவர். ஆனால், ஹைதராபாத் நகரை சேர்ந்த ஓம் அவுதார் சேத்(82) நீச்சல் பயிற்சி மேற்கொண்டார். அதன் பயனாக, நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் உலக மாஸ்டர் கேம்ஸ் போட்டி ஏப்ரல் 21ம் தேதி நடைப்பெறுகிறது. அந்த போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு சேத்துக்கு கிடைத்துள்ளது.
ஸ்டீல் அதாரிட்டி ஆப் இந்தியா நிறுவனத்தில் 2௦ ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அவர் உள்ளூர் நீச்சல் பயிற்சி நிலையத்தில் சேர்ந்து தனது நீச்சல் திறனை மேம்படுத்திக் கொண்டார். அதன் பிறகு, திருவனந்தபுரம், இந்தூர் மற்றும் போபால் ஆகிய இடங்களில் ஸ்விம்மிங் பெடரேசன் ஆப் இந்திய நடத்திய நீச்சல் போட்டிகளில் கலந்துக்கொண்டு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.
இதுக்குறித்து சேத் கூறுகையில்,
“நான் 15 ஆண்டுகளுக்கு முன்பு தான் நீச்சல் பயிற்சியை தீவிரமாக எடுத்துக்கொண்டேன். தற்போது எனக்கு 82 வயது ஆனாலும், இடைவிடாமல் ஒரு மணி நேரம் என்னால் நீச்சல் அடிக்க முடிகிறது. கடந்த 5௦ ஆண்டுகளாக ஆஸ்துமா நோயால் அவதிப்படுகிறேன். ஆனாலும், நீச்சல் பயிற்சியை மட்டும் நிறுத்தியதில்லை. என்னை போன்று ஆஸ்துமா வியாதியால் அவதிப்படுவோருக்கு இந்த விளையாட்டை பரிந்துரை செய்கிறேன்.
ஆக்லாந்து நகரில் நடைபெறவிருக்கும் 400 மீட்டர் மற்றும் 800 மீட்டர் ப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் கலந்துக்கொள்ள போகிறேன். சர்வதேச விளையாட்டு போட்டியில் கலந்துக்கொள்வது இதுவே முதல்முறையாகும். காலையில் நடைபயிற்சி, உள்ளூர் நீச்சல் குளத்தில் பலமணி நேரம் நீச்சல் பயிற்சி மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும் டாய் சீ வகுப்புகள் தான் எனது உடலை நல்ல முறையில் வைத்திருக்க உதவுகிறது” என்றார்.