June 24, 2017 தண்டோரா குழு
இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு அஞ்சுகிறது என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகளின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டத்தை கண்டித்து தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறுகையில் “உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாத நிலையை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால் தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை அரசு நீட்டித்திருக்கிறது. அந்த மசோதாவிற்கு எதிர்ப்பை காட்டுவதற்காகவே திமுக வெளிநடப்பு செய்துள்ளோம்.
அதிமுகவிடம் இரட்டை இலை சின்னம் இல்லை, கட்சியும் இரண்டாக மூன்றாக உடைந்திருப்பதால் தேர்தலை நடத்த அஞ்சுகிறது.” என்றார் ஸ்டாலின்.