July 11, 2023 தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் வெளிச்சந்தைகளில் தக்காளி அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை அடுத்து தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் தக்காளி வரத்தினை அதிகரித்து, உழவர் சந்தைகளின் மூலம் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தக்காளி தடையின்றி கிடைக்க தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்கள் ஆகியோரால் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர், வடவள்ளி, மேட்டுப்பாளையம், சுந்தராபுரம் மற்றும் பொள்ளாச்சி ஆகிய 6 உழவர் சந்தைகளில் தக்காளி குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கூறியிருப்பதாவது:
விவசாயிகளிடம் தக்காளி நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு உழவர் சந்தைகளில் சுமார் 1,800 கிலோ தக்காளியை கிலோ ஒன்றுக்கு ரூ.80 என்ற அளவில் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்டது. இனிவரும் காலங்களில் தக்காளி வரத்தினை அதிகரித்து விலை உயர்வை கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் தக்காளியை கொள்முதல் செய்து சந்தை விலையைவிட குறைந்த விலைக்கு உழவர் சந்தைகளில் விற்பனை செய்ய தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.