January 19, 2017 தண்டோரா குழு
மதுரை மாநகரில் வரும் பிப்ரவரி 3ஆம் தேதி வரை 15 நாட்களுக்குப் பொது இடங்களில் ஊர்வலமோ, ஆர்ப்பாட்டமோ நடத்த மதுரை காவல்துறை தடை விதித்துள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நான்காவது நாளாகப் போராட்டம் நடைபெற்று வருகிறது. அலங்காநல்லூர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மதுரை தமுக்கம் மைதானம், கோரிப்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மதுரை ரயில் நிலையத்திற்குள் புதன்கிழமை புகுந்த மாணவர்கள், தண்டவாளத்தில் அமர்த்து போராடி வருகின்றனர். ரயிலையும் மறித்து இளைஞர்கள், மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மதுரை முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இதனிடையே மதுரை மாநகரில் வரும் பிப்ரவரி 3ஆம் தேதி வரை 15 நாட்களுக்குப் பொது இடங்களில் ஊர்வலமோ, ஆர்ப்பாட்டமோ நடத்த மதுரை காவல்துறை தடை விதித்துள்ளது.
ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்த வேண்டுமெனில் 5 நாட்களுக்கு முன், அனுமதி பெற வேண்டும் என மதுரை மாநகர காவல் ஆணையர் கூறியுள்ளார். தடையை மீறி ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.