September 29, 2021 தண்டோரா குழு
1991-1996 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர் இந்திரகுமாரி.அமைச்சராக இருந்த போது ஊழலில் ஈடுபட்டதாக இவர் மீதும் இவரது குடும்பத்தினர் மீதும் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து,முறைகேடு செய்ததாக அவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் ஊழல் தடுப்புச் சட்டம், கூட்டுச்சதி, மோசடி ஆகிய பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.
இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்,முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.
இந்த நிலையில்,இந்த வழக்கு இன்று (29/09/2021) விசாரணைக்கு வந்தபோது, ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி,கணவர் பாபு,சண்முகம் ஆகிய மூன்று பேரும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார்.
மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, கணவர் பாபுவுக்கு ஊழல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறை,முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி சண்முகத்திற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இந்திரகுமாரி, தற்போது திமுகவில் மாநில இலக்கிய அணிச் செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.