March 6, 2017 தண்டோரா குழு
“கடந்த சில மாதங்களாக எங்கள் குடும்பம் நிறைய சோதனைகளைச் சந்தித்துள்ளது. இதனை ஒன்றிணைந்து எதிர்கொள்வோம்” என்று தனுஷ் சதோதரி விமலா கீதா தெரிவித்துள்ளார்.
பிரபல பின்னணிப் பாடகியும் நடிகர் கார்த்திக்கின் மனைவியுமான சுசித்ராவின் “டுவிட்டர்” கணக்கிலிருந்து தனுஷ் மற்றும் இதர பிரபலங்களைப் பற்றி பல்வேறு விதமான “ட்வீட்கள்” வெளியாகின. இதனால், டுவிட்டர் வலைத்தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு ஹேச் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கபட்டது.
பிரபல நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள், வீடியோக்கள், மின்னஞ்சல்கள் என தனிப்பட்ட தகவல்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டதால் தமிழ்த் திரையினர் மிகுந்த கவலையடைந்தனர். தற்போது அத்தகைய புகைப்படங்களும் வீடியோக்களும் அவருடைய “டுவிட்டர்” கணக்கிலிருந்து அகற்றப்பட்டுள்ளன. இதையடுத்து, சுசித்ராவின் “ட்விட்டர்” கணக்கு தற்போது நீக்கப்பட்டுள்ளது. இதனால் சுசித்ராவின் “ட்விட்டர்” சர்ச்சைகளுக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது.எனினும், இந்த சர்ச்சையில் பெரிதும் பாதிக்கபட்டவர் நடிகர் தனுஷ்தான். அவர் குறித்த பதிவுகளும் புகைப்படங்களும்தான் அதிகமாக சர்ச்சைக்கு ஆளாகியுள்ளன.
இந்நிலையில் தனுஷின் சகோதரி விமலா கீதா தனது “டுவிட்டர்” பக்கத்தில் உருக்கமாகப் பதிவு எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
கடந்த சில மாதங்களாக எங்கள் குடும்பம், பல்வேறு பிரச்னைகளால் மிகவும் வேதனையில் உள்ளது. இருப்பினும் நாங்கள் அமைதியாகவே இருந்தோம். தேனியில் உள்ள சிறு கிராமத்தில் இருந்துதான் இன்று இந்த நிலைமைக்கு வந்துள்ளோம். எங்கள் சகோதரர்கள் விமரிசனங்களும் அவமானங்களும் பட்டே இந்த நிலைமைக்கு வந்துள்ளார்கள்.
எங்களுக்கு எல்லாவிதமான ஒழுக்கங்களும் சொல்லித் தரப்பட்டன, எவ்விதமான வாழ்க்கையை வாழ்ந்தோம் என்பது கடவுளுக்குத்தான் தெரியும். கடின உழைப்பால் தனுஷ் இன்று மிகப்பெரிய நட்சத்திரம் ஆகியுள்ளார். ஆனால், இந்தப் புகழுக்கு விலை உள்ளது என நினைக்கிறேன். பழிவாங்கும் செயல்கள் எல்லா விதங்களிலும் சாத்தியம். எல்லா ஊடகங்கள் வழியாகவும் நடத்தையில் களங்கம் விளைவிப்பது சாத்தியம். ரசிகர்களின் மகிழ்ச்சிக்காக தன்னை வருத்திக்கொள்ளும் நடிகருக்கு இதுதான் கிடைக்குமா?
டுவிட்டரில் யார் என்ன வேண்டுமானாலும் பேசலாம். பதிவு செய்யலாம் என்றாகிவிட்டது. மிகுந்த மனவேதனையுடன் “டுவிட்டர்” மற்றும் ஃபேஸ் புக்கிலிருந்து நான் விலகுகிறேன். எங்கள் குடும்பம் நிறைய சோதனைகளைச் சந்தித்துள்ளது. இதனை ஒன்றிணைந்து எதிர்கொள்வோம்.யாரிடமும் பேசவோ சந்திக்கவோ விருப்பம் இல்லை. இதைச் செய்பவர்கள் யாராக இருந்தாலும் முதலில் நிறுத்துங்கள். இதன் விளைவாக பெண்கள் சாகும் வரை சென்றால் அந்த உயிரைத் திருப்பித் தரமுடியுமா? வாழுங்கள், வாழ விடுங்கள்”.
இவ்வாறு தனுஷ் சகோதரி கூறியுள்ளார்.