April 19, 2016 வெங்கி சதீஷ்
தமிழில் ஒரு பழமொழி உண்டு பாம்பு உண்ணும் ஊருக்குப் போனால் நடுக்கண்டம் நம்மது என்பது தான் அது. அதே போல ஊருடன் ஒத்துவாழ் என்றும் எளிமையாகக் கூறுவார்கள்.
அதாவது உலகத்தில் யாராவது ஒருவர் சொன்னால் அதை ஆமோதித்து நடந்தால் தான் நிலைக்க முடியும் என்ற கொள்கையை கொண்டிருந்தனர் மக்கள். அவர்களுக்கு நடுவே உலகம் முழுவதும் ஆங்காங்கே ஒரு சில அறிவுஜீவிகள் அவ்வப்போது முளைத்து வந்தனர்.
அவர்கள் அனைவரையும் இந்த உலகம் அப்போது அதிகப்பிரசங்கி என்றும் முட்டாள் என்றும் பரிகாசம் செய்ததோடு, அவர்களை ஒதுக்கி வைத்த சம்பவங்களும் நடைபெற்று உள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை பாரதியார் பாடல்களுக்கு என்று வகுக்கப்பட்ட விதிகளை மீறிப் பாடல் எழுதினார்.
அவை அப்போது பெரும் எதிர்ப்பைப் பெற்றன. ஆனால் பிற்காலத்தில் அதுவே மக்கள் மனதில் ஒரு வேட்கையை உருவாகியதோடு, சாமானியனும் தமிழை பாடவும் எழுதவும் முடியும் என்ற நிலை ஏற்பட்டது.
அவரை அப்போது உலகம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல பிரபல கிரேக்க தத்துவ ஞானி சாக்ரட்டீஸுக்கு ஆரம்பக் காலங்களில் ஒன்றும் மரியாதை இல்லை. மேலும் உணவுக்குக் கூட பஞ்சம் ஏற்பட்டதால் அவரது மனைவி அவரை சதா சர்வகாலமும் திட்டிக்கொண்டே இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு முறை அவர் வாசலில் உள்ள திண்ணையில் அமர்ந்து தனது தத்துவம் குறித்து பேசிக்கொண்டு இருந்தபோது அவரது மனைவி திட்டிக்கொண்டே இருந்தார். பின்னர் திடீரென வாலி முழுவதும் தண்ணீர் எடுத்து வந்து அவர் மீது ஊற்றினார்.
அப்போது அவர் தனது நபரிடம் இது வரை இடி இடித்தது பின்னர் மழை பொழிந்தது அவ்வளவு தான் நீங்கள் சொல்லுங்கள் என இயல்பாகப் பேசத்துவங்கினார். இதிலிருந்தே அவரது மதிப்பு வீட்டில் இவ்வளவுதான் எனத் தெரிகிறது.
அதே போல மனிதனின் தற்போதைய அறியக் கண்டுபிடிப்புகளின் மூலமாக இருந்த டார்வின் கொள்கையை அவர் வெளியிட்ட காலத்தில் இருந்த அறிவியலாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதோடு, அவரை மிகவும் கிண்டலும் கேலியும் செய்தனர். உயிரினங்கள் அனைத்தும் ஏதாவது ஒரு உயிரில் இருந்து வந்திருக்க வேண்டும் எனக் கூறிய அவர் தன்னுடைய கடல் பயணத்தின் மூலம் சென்று வந்த நாடுகளில் கண்ட அதிசய பிராணிகள் மற்றும் விந்தை மனிதர்களைப் பார்த்து பரிணாம வளர்ச்சி என்ற கோட்பாட்டை வகுத்தார்.
அதில் அவர் மனித இனம் ஒருசெல் உயிரினத்தில் இருந்து மாறி குரங்கில் இருந்து மனிதன் வந்தான் எனக் கூறினார். இதற்கு உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் அவரது முகத்தைக் குரங்கு முகமாக மாற்றி அச்சிட்டு அவரை அசிங்கப்படுத்தினர்.
ஆனாலும் மனம் தளராத அவர் இதைக் கட்டாயம் புத்தகமாக வெளியிடுவேன் எனக் கூறி புத்தகத்தை வெளியிட்டார். அவரது காலத்தில் அது ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும் தற்போது பல்வேறு நோய்களுக்குத் தீர்வு காணப்படும் டி.என்.ஏ முறையைக் கண்டறிய தூண்டுகோலாக இருப்பது அவரது புத்தகம் தான் என்றால் மிகையாகாது.
இன்று அவரது நினைவு தினம் என்பதால் அவரைப்பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது கட்டாயமாகிறது. உலகம் எப்போதுமே அறிவாளிகளை உடனடியாக ஒத்துக்கொள்வதில்லை என்பது மட்டும் அனைத்து அறிவாளிகளின் வாழ்கையில் இருந்தும் தெரிந்து கொள்ளலாம்.
மைன்ட் வாய்ஸ்.
நான் கூட இந்தப் பதிவுகளை எல்லாம் பத்திரப்படுத்தி வச்சிருக்கேன் பிற்கால சந்ததிகள் படித்து புரிஞ்சிகிட்டு……………… அப்பறம் நீங்களே புருஞ்சிக்கோங்க……………..