January 17, 2017 தண்டோரா குழு
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது நூற்றாண்டுவிழாவையொட்டி சிறப்புத் தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது.
மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆரின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்புத் தபால் தலை, சிறப்பு நாணயம் வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தமிழக அரசு கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு மறைந்த தமிழக முதல்வர் ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி சிறப்பு நினைவுத் தபால் தலையை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் நினைவு எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் எம்ஜிஆர் சிறப்புத் தபால் தலையை, தமிழ்நாடு தலைமை அஞ்சல் அலுவலர் டி. மூர்த்தி வெளியிட தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பெற்றுக் கொண்டார்.
முன்னதாக, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு முதலமைச்சரும் அமைச்சர்களும் மலர் அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.