August 24, 2023 தண்டோரா குழு
சோடியம் அயன் பேட்டரிகள் (நா-அயன் பேட்டரிகள்) உற்பத்தியில் முன்னணி நிறுவனமான சோடியன் எனர்ஜி நிறுவனம், மற்றும் பெட்ரோல் வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றுவதில் முன்னோடி நிறுவனமான ஏஆர்4 டெக் நிறுவனத்துடன் இணைந்து இந்திய சந்தையில் சோடியம் அயன் பேட்டரிகளை விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்த செய்தியாளர்கள் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. இதில் சோடியன் எனர்ஜி நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான பாலா பச்சைப்பா பேசுகையில்,
தற்போது எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், இன்னும் சில ஆண்டுகளில் வீடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சோலார் பயன்பாடு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். எனவே எதிர்கால சந்தை கருதி இந்த புதிய சோடியன் அயன் பேட்டரிகளை அறிமுகம் செய்துள்ளதாக கூறிய அவர், பெரிய மேடுகளில் ஏறும் வாகனங்கள், அதிக சுமைகளை கொண்டு செல்லும் மின்சார வாகனங்களுக்கு வேகமான சார்ஜிங் மற்றும் அதிக டிஸ்சார்ஜ் விகிதங்கள் தேவைப்படுகின்றன.
அதற்கு இந்த பேட்டரிகள் மிகவும் பொருத்தமானதாக இருக்கும். பேக்கப் பவர் சப்ளை,சோலார் எனர்ஜி ஸ்டோரேஜ் மற்றும் பெட்ரோல் வாகனங்களுக்கான ஸ்டார்டர் பேட்டரிகள் போன்றவற்றிற்கும் இந்த சோடியம் அயன் பேட்டரிகள் சிறப்பானதாக இருக்கும் என்று தெரிவித்தார்.
மேலும் சோடியம் அயன் பேட்டரிகள் மற்ற வகை பேட்டரிகளை விட பாதுகாப்பு, குறைந்த விலை மற்றும் நீண்ட ஆயுட்காலம் உட்பட பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். இன்னும் 2 முதல் 3 ஆண்டுகளில் இந்திய சந்தையில் லித்தியம் அயன் பேட்டரிகளைவிட சோடியன் அயன் பேட்டரி சிறப்பானதொரு இடத்தை பிடிக்கும் என்று கூறிய அவர்,நீண்ட கால கண்ணோட்டத்துடன் பார்க்கையில் சோடியம் அயன் பேட்டரிகள் நீடித்து உழைப்பதோடு லீட் ஆசிட் பேட்டரிகளை விட விலையும் குறைவானவை ஆகும்.
மேலும் இந்த பேட்டரிகள் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருப்பதோடு.இதன் தொழில்நுட்பம் இன்னும் இளமையாக இருப்பதால், இந்திய சந்தையில் சிறப்பானதொரு இடத்தை பிடிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.