April 19, 2023 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கோவை மாநகராட்சிக்கு கடந்த 2022-ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998-க்கு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 13.04.2023 முதல் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் விதிகள் 2023, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998, பிரிவு 84(1)ன் படி, சொத்து உரிமையாளர்கள் தங்களது 2023-24 ஆண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்துவரியினை ஏப்ரல் 30-ம் தேதிக்குள் செலுத்தினால், ஊக்கத்தொகை பெற தகுதி உடையவர் ஆகிறார்கள்.
சொத்து உரிமையாளர்கள், சொத்துவரியினை செலுத்த மாநகராட்சி மூலம் பல்வேறு வகையான விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, சொத்து உரிமையாளர்களுக்கு குறுந்தகவல் அனுப்புதல், வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்பு வெளியிடுதல் உள்ளிட்ட பல்வேறு வகையில் விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சொத்து உரிமையாளர்கள், சொத்துவரியினை தங்களது இல்லம் தேடி வரும் வரி வசூலிப்பாளர்கள் மற்றும் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் உள்ள வரி வசூல் மையங்களில் செலுத்தலாம். கடன் மற்றும் பற்று அட்டை, காசோலை மற்றும் வரைவோலை மூலமாகவும், டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாகவும் செலுத்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட சொத்து உரிமையாளர்கள், தங்களது சொத்துவரியினை ஏப்ரல் 30-ம்தேதிக்குள் செலுத்தி, ஊக்கத்தொகையினை பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.