January 17, 2017 தண்டோரா குழு
ஏ.டி.எம். மையங்களில் உள்ள இயந்திரங்களிலிருந்து பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பை 1௦,௦௦௦ ரூபாயாக உயர்த்தி இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி 5௦௦ மற்றும் 1,௦௦௦ ரூபாய் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வரி ஏய்ப்பு, ஊழல் மற்றும் கள்ள நோட்டுக்களைத் தடுப்பதே இந்த அறிவிப்பின் நோக்கம் என மத்திய அரசாங்கம் தெரிவித்தது.
இதன் விளைவாக மக்கள் தினமும் வங்கி மற்றும் ஏடிஎம் மையங்கள் முன் வரிசையில் காக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. “இந்தச் சிரமத்தை ஐம்பது நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்கள்” என்று பிரதமர் மக்களை கேட்டுக் கொண்டார்.
ஆனாலும், அதன் பிறகு மக்களின் பிரச்சினையில் அதிக முன்னேற்றம் இல்லை. தற்போது ஏ.டி.எம். இயந்திரங்களில் இருந்து பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பு 1௦,௦௦௦ ரூபாயாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இது குறித்து ரிசர்வ் வங்கி திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
“ஏ.டி.எம். இயந்திரங்களில் தினமும் 4,500 ரூபாய் எடுக்கலாம் என்ற உச்சவரம்பு 1௦ ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மக்கள் வாரத்திற்குப் பணம் எடுப்பதற்கான 24 ஆயிரம் ரூபாய் உச்ச வரம்புக்குள் இந்த பயன்பாடு இருக்கும்.
வங்கிகளில் நடப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் ஒரு வாரத்திற்கு 5௦ ஆயிரம் ரூபாய் எடுக்கலாம் என்றுள்ளது. இது 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகள் உடனடியாக அமலுக்கு வரும்.
இவ்வாறு ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த புதிய அறிவிப்பு மூலம் இனி ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கும் சிரமங்கள் சற்றுக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.