December 2, 2017 தண்டோரா குழு
புதுதில்லி ஐஐடியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில், மைக்ரோசாப்ட் நிறுவனம் மாணவர் ஒருவருக்கு 1.4 கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை வழங்கியுள்ளது.
புதுதில்லியில் உள்ள ஐஐடியில் வேலைவாய்ப்பு முகாம் நடந்து வருகிறது. நேற்று (டிசம்பர் 1) நடந்த வேலை வாய்ப்பு முகாமில் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட 15 நிறுவனங்கள் மாணவர்களிடம் நேர்காணல் நடத்தியது. அதன் பிறகு, ஒரு மாணவருக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் 1.4 கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை வழங்கியுள்ளது.
இன்று (டிசம்பர் 2) அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், NVIDIA, ஓரக்கல் இந்தியா உள்ளிட்ட 16 நிறுவனங்கள் மாணவ மாணவிகளுக்கு நேர்காணலில் நடத்தி, அதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு 1 கோடி ரூபாய் சம்பளம் கொண்ட வேலையை வழங்கியது.
ஐ.ஐ.டி.யில் ஆண்டுதோறும் நடைபெறும் வேலைவாய்ப்பு முகம் நடந்து வருவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான வேலைவாய்ப்பு முகாமின் முதல் சுற்று டிசம்பர் 15ம் தேதிக்குள் முடிவடைகிறது. அதை தொடர்ந்து, ஜனவரி மாதம் மீண்டும் பல்வேறு நிறுவனங்கள் இதில் கலந்துக்கொண்டு, மாணவ மாணவிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கவுள்ளது.
கடந்த ஆண்டு புதுதில்லி ஐஐடியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமை விட, இந்த ஆண்டு நடைபெறும் முகாம் சிறப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஆனால் 2016ம் ஆண்டில், பணி தேர்வுகளின் எண்ணிக்கையில் ஒரு சிறிய சரிவு ஏற்பட்டது. இந்த ஆண்டு நடந்த வேலைவாய்ப்பு முகாமில், பல பெரிய நிறுவனங்கள் கலந்துகொண்டு, பலருக்கு வேலைவாய்ப்பை அளித்துள்ளது. மேலும், கடந்த ஆண்டு வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 200 நிறுவனங்கள் கலந்துக்கொண்டு சுமார் 350 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது. அதில் 20 மாணவர்கள், 100,000 டாலர் மதிப்புள்ள பணியை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.