July 10, 2017 தண்டோரா குழு
நாடு முழுவதும் ஐஐடி மாணவர் சேர்க்கை, மற்றும் கலந்தாய்வுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த ஐஐடி நுழைவுத்தேர்வில் இந்தி வினாத்தாளில் ஒரு கேள்வி தவறாக கேட்கப்பட்டிருந்தது. எழுத்துப்பிழை உள்ளிட்ட காரணங்களால் அக்கேள்வி தவறானதாக கருதப்பட்டது. இதற்காக, அக்கேள்விக்கு பதில் அளித்த அனைத்து மாணவர்களுக்கும் சலுகை மதிப்பெண் வழங்கப்படுவதாக ஐஐடி நிர்வாகம் அறிவித்தது.
இதனையடுத்து, சலுகை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதை எதிர்த்து தமிழகத்தின் வேலூரைச் சேர்ந்த ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சென்னை உள்ளிட்ட, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து ஐஐடியில் மாணவர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வுக்கு கடந்த வாரம் இடைக்கால தடை விதித்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பதிலளித்த ஐஐடி நிர்வாகம், வினாத்தாளில் பிழை இருப்பது தெரிந்ததும் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் சலுகை மதிப்பெண் வழங்கப்பட்டது. இது போன்ற சம்பவம் இனி ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், மாணவர்கள் சேர்க்கை மற்றும் கலந்தாய்வுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியதுடன், சலுகை மதிப்பெண்ணிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் தள்ளுபடி செய்தது.