June 27, 2017
தண்டோரா குழு
ஐ.நா வின் குழந்தைகளுக்கான பாதுகாப்பு அமைப்பின் நல்லெண்ணத் தூதராக சிரிய அகதியான முசூன் அல்மெலெஹான் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2௦13ம் ஆண்டு சிரியாவில் நடந்த உள்நாட்டு போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். பலர் தங்கள் பாதுகாப்பு கருதி பல நாடுகளுக்கு அகதிகளாக சென்றனர். தங்கள் தாய்நாடான சிரியாவை விட்டு வெளியேற விரும்பாமல் அங்கேயே சிலர் தங்கிவிட்டனர்.
உள்நாட்டு போரால் பதிக்கப்பட்ட சிலர் ஜோர்டான் நாட்டிற்கு அகதிகளாக வந்தனர். அவர்களில் முசூன் அல்மெலெஹானும் ஒருவர். புலம் பெயர்ந்த அகதிகளின் கல்வி குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர்.
இது குறித்து ஐ.நா வின் துணை நிர்வாக இயக்குனர் ஜஸ்டின் கூறுகையில்,
மறைந்த முன்னாள் பிரபல ஹாலிவுட் நடிகை ஆட்ரே ஹெப்பர்ன் சிறுமியாக இருந்த போது, ஐ.நா வின் ஆதரவை பெற்றிருந்தார். அவருடைய அடிச்சுவடிகளை முசூன் பின்பற்றி வருகிறார்” என்று கூறினார்.
“சிரியாவை விட்டு வெளியேறியபோது, என்னுடைய பள்ளி புத்தகங்களை என்னுடன் எடுத்து சென்றுவிட்டேன். அகதியாக இருந்தபோது, குழந்தைகள் சிறு வயதிலேயே திருமணத்திற்கு கட்டாயப்படுத்தப்படுவது அல்லது வேலைக்கு அனுப்பப்படுவதை பார்த்துள்ளேன். ஆனால், ஐ.நா அமைப்புடன் பணிபுரிவது மூலம், குழந்தைகளில் கல்விக்கு குரல் கொடுப்பதுடன், அவர்களை பள்ளிக்கு அனுப்பவும் முடியும் என்று முழுமனத்தோடு நம்புகிறேன்” என்று முசூன் தெரிவித்தார்.
மேலும்,ஜூன் 20 ஆம் தேதி உலக அகதிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு சிரியா அகதியான முசூன் அல்மெலெஹான், யுனிசெப் எனப்படும் ஐ.நா வின் குழந்தைகளுக்கான பாதுகாப்பு அமைப்பின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.