October 5, 2017 தண்டோரா குழு
ஒடிஸாவில் 3 idiots திரைப்பட பாணியில் கர்ப்பிணி பெண்ணுக்கு தொலைபேசி மூலம் மருத்துவரின் ஆலோசனையை கேட்டு செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓடிஸா மாநிலத்தில், கேந்திரபாத்ரா மாவட்டத்தில் சாய் மருத்துவமனை உள்ளது. ஆர்த்தி சமால் என்னும் கர்ப்பிணி பெண் பிரசவத்திற்காக அந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருடைய கணவரும் அவருக்கு துணையாக மருத்துவமனையில் இருந்தார்.
இந்நிலையில் ஆர்த்திக்கு பிரசவம் பார்க்கவேண்டிய டாக்டர் ரஷ்மிகாந்த் பாத்ரா மருத்துவமனையில் இல்லை. ஆர்த்திக்கு பிரசவ வேதனை எடுக்க தொடங்கியது. அங்கிருந்த செவிலியர்கள், டாக்டரின் ஆலோசனையை தொலைபேசி மூலம் கேட்டு அறுவை சிகிச்சை மூலம், குழந்தையை வெளியே எடுக்க முயன்றனர். ஆனால், அந்த குழந்தை இறந்துவிட்டது. செவிலியர்கள் செய்த அறுவை சிகிச்சையால், குழந்தையும் இறந்துவிட்டது. அதே நேரத்தில், ஆர்த்தியின் கர்ப்பப்பையும் சேதம் அடைந்தது.
ஆர்த்தியின் கணவர் இறந்த குழந்தையின் சடலத்தை எடுத்துக்கொண்டு, கேந்திர பர்தா காவல் நிலையத்திற்கு சென்று மருத்துவருக்கு எதிராக ஏப்ஐஆர் வழக்கு பதிவு செய்தார்.
இது குறித்து ஆர்த்தியின் கணவர் கூறுகையில், “டாக்டர் ராஷ்மிகாந்த் பாத்ரா ஆலோசனைபடி, ஆர்த்தியை பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்த்தேன். தான் மருத்துவமனையில் இல்லாததால், ஆர்த்தியை நன்றாக கவனித்துக்கொள்ள செவிலியர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று டாக்டர் கூறினார்.
என்னுடைய மனைவியின் உடல்நிலை மோசமாக இருந்தபோதும், அவர் வரவில்லை. அவளுக்கு அறுவை சிகிச்சை செய்தது யார்? என்று எனக்கு தெரியவில்லை. எங்களுடைய முதல் குழந்தையும் இறந்துவிட்டது. என் மனைவியின் கர்ப்பப்பையும் சேதம் அடைந்தது. மருத்துவரின் கவனக்குறைவால் தான் இந்த சம்பவம் ஏற்பட்டது” என்று கூறினார்.