September 26, 2023 தண்டோரா குழு
கோவை ஒண்டிப்புதூரில் ரயில்வே கிராசிங் பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ள நிலையில் சூர்யா நகரை இணைக்கும் ராமச்சந்திரா சாலையில் ரயில்வே கேட் மட்டும் உள்ளது. அங்கு மேம்பாலம் கட்டப்படாமல் உள்ளது.
சூர்யா நகரில் இருந்து பள்ளி கல்லூரிகள் மற்றும் பணிக்கு செல்பவர்கள் ரயில்வே கேட்டை கடந்து சென்று வருகின்றனர். இந்நிலையில் ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்படுவதாக அப்பகுதி மக்களிடையே தகவல் பரவிய நிலையில் அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், ரயில்வே கிராசிங் பகுதியில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தியும் இன்று சூரியா நகரை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு கருப்பு கொடியுடன் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள், ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூடும் அரசின் நடவடிக்கைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க சுமார் 26 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் இன்னும் பாலம் கட்டுவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டிய போராட்டக்காரர்கள், மேம்பாலம் அமைக்கப்படுவதற்கு முன்பு ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூடப்படுவது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.
ரயில்வே கேட் மூடப்பட்டால் நகரின் முக்கிய பகுதிகளுக்கு செல்வதற்கு 4 கிலோமீட்டர் தூரம் சுற்றுச்செல்லும் நிலை ஏற்படும் எனவும், தமிழ்நாடு அரசு தாமதிக்காமல் உடனடியாக மேம்பாலம் அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் எனவும் ராமச்சந்திரா சாலையில் ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூடும் நடவடிக்கையை கைவிட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட சுமார் 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.