March 17, 2022
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண் 17க்குட்பட்ட கவுண்டம்பாளையம், சேரன் நகர்,அபிராமி நகர் பகுதியில் சுமார் 400 குடியிருப்புகள் உள்ளன.
இப்பகுதிகளில் 24 மணி நேரமும் தடையின்றி குடிநீர் வழங்குதல்,குடிநீர் சீரான அளவு வழங்குதல்,பழுதுகளை கண்டறிதல், இணை வழியில் கண்காணித்தல் போன்ற பணிகள் ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.தனியார் தொழில்நுட்ப கல்லூரி சார்பில் ஒன்றிய அரசு அறிவியல் தொழில்நுட்பத்துறை நிதியில் இப்பணிகள் 95 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன.
விரையில் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.அதன்பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். தற்போது நடைபெற்று வரும் பணிகளான கட்டுப்பாட்டு அறை,குடிநீர் தரம், விநியோகம் செய்யும் முறைகள்,திட்டம் செயல்படுத்தும் முறைகள், தொழில்நுட்பம் ஆகியவை குறித்து மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு செய்தார்.
முன்னதாக செல்வம்பதி, கிருஷ்ணம்பதி குளங்களில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை மாநகராட்சி கமிஷனர் ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின்போது 17வது வார்டு கவுன்சிலர் சுபஸ்ரீ சரத், மேற்கு மண்டல உதவி கமிஷனர் சரவணன், குடிநீர் நிர்வாக பொறியாளர் உமாதேவி மற்றும் பலர் உடனிருந்தனர்.