March 14, 2022
தண்டோரா குழு
கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஒரு ரூபாய் இட்லி பாட்டி கமலாத்தாளை கட்டிப்பிடித்து கொஞ்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.
கோவை ஆலாந்துறையை அடுத்த வடிவேலாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கமலாத்தாள். 85 வயதான இவர் கடந்த 30 ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வருகிறார். இவரது லாப நோக்கமற்ற மனதை பொதுமக்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை அனைவரும் பாராட்டியுள்ளனர்.
ஒரு ரூபாய் பாட்டி என்றே அழைக்கப்பட்டு வரும் கமலாத்தாள் பாட்டி பல விருதுகளை பெற்று வருகிறார்.இந்நிலையில், கோவை திருமலயாம்பாளையம் பகுதியில் உள்ள நேரு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கமலாத்தாள் விருது வழங்குவதற்காக அழைக்கப்பட்டிருந்தார்.
சிறப்பு அழைப்பாளராக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் கலந்து கொண்டு சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கினார்.அப்போது கமலாத்தாள் பாட்டியை பார்த்ததும் கட்டித்தழுவி கொஞ்சினார். மேலும், அவரை நலம் விசாரித்ததுடன் விருது வழங்கி கவுரவப்படுத்தினார்.
ஒரு ரூபாய் இட்லி பாட்டியை அறிந்து வைத்ததுடன், ஆளுநர் அவரை பார்த்ததும் கட்டிப்பிடித்து கொஞ்சியது காண்போரை நெகிழ்ச்சியடைய வைத்தது. இந்த நிகழ்ச்சியில் நேரு கல்வி குடும்பத்தின் முதன்மை செயலாளர் மற்றும் கல்வி அதிகாரி கிருஷ்ணகுமார், தலைவர் கிருஷ்ண தாஸ் மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.