January 6, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி பகுதியில் தினமும் 6 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோவையில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டு உள்ளது. கடந்த 4 நாட்களில் 17 ஆயிரத்து 132 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த 3 நாட்களில் இருமடங்காக உயர்ந்து உள்ளது.
மாநகராட்சி பகுதிகளில் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் விதிப்பது தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா விதிமீறலில் ஈடுபட்டவர்களுக்கு நேற்று ஒரே நாளில் ரூ.61,500 அபராதமாக விதிக்கப்பட்டது.
இதுதவிர கடை வீதிகளான ஒப்பனக்கார வீதி, பெரிய கடை வீதி, ராஜவீதி, கிராஸ்கட் ரோடு, காந்திபுரம் மற்றும் சிங்காநல்லூர் பஸ் நிலையங்களில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுவதுடன், முகக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.