April 11, 2017 தண்டோரா குழு
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட மோதல் வழக்கு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மகன் மற்றும் தம்பி ஆகியோரைக் கைது செய்ய, ஏப்ரல் 13-ம் தேதி வரை தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா(ஓ.பன்னீர்செல்வம் அணி) கட்சி வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து தண்டையார்பேட்டை நேதாஜி நகர் பகுதியில் கடந்த 6-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்தார். அப்போது அ.தி.மு.க. அம்மா (சசிகலா அணி) டி.டி.வி தினகரன் தரப்பினருக்கும், ஓ.பி.எஸ் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார், தம்பி ஓ.ராஜா உள்ளிட்டவர்கள் மீது ஆர்.கே.நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி ரவீந்திரநாத் குமார், ஓ.ராஜா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் மற்றும் தம்பி ஓ.ராஜா ஆகியோரைக் கைது செய்ய ஏப்ரல் 13-ம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டார்.