May 11, 2017 தண்டோரா குழு
ராஜமௌலி இயக்கத்தில்,ராணா,பிரபாஸ் உள்ளிட்ட பலர் நடித்த “பாகுபலி 2” படம் உலகமெங்கும் வெளியாகி 10 நாட்களில் ரூ.1000 கோடிக்கு மேலாக வசூலாகி சாதனை படைத்து வருகிறது. இப்படம் இந்திய சினிமாவை உலக தரத்திற்கு எடுத்து சென்றுள்ளது. இதனால், இந்தியாவில் எங்கு பார்த்தாலும் பாகுபலி புகழ் தான் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஓடிஷாவில் புதிதாக பிறந்த புலிக்குட்டி ஒன்றுக்கு பாகுபலியின் பெயரை வைத்திருக்கிறார்கள். ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் அருகே உள்ளது நந்தன் கண்ணன் வனவிலங்கு பூங்கா.இங்குள்ள மேகா, விஜயா, சினேகா ஆகிய புலிகள், ஏழு குட்டிகளை சமீபத்தில் ஈன்றன.
இதற்கு என்ன பெயர் வைக்கலாம் என வனவிலங்கு அதிகாரிகள் பார்வையாளர்களிடமே கேட்டிருந்தனர்.இதற்காக வனவிலங்கு பூங்காவில் பெட்டி வைத்து அதில் தாங்கள் விரும்பிய பெயர்களை எழுதி போடலாம் என கூறியிருந்தனர்.
இதனையடுத்து, வனவிலங்கு அதிகாரிகள் நேற்று இதை திறந்து பார்த்தனர். 400க்கும் மேற்பட்டோர் தங்கள் விரும்பங்களை தெரிவித்திருந்தனர். அதில் ஏராளமானோர் பாகுபலி என்ற பெயரை சிபாரிசு செய்திருந்தனர்.அதைபோல் பலர் தேவசேனா என்ற பெயரையும் சிபாரிசு செய்தனர். இதையடுத்து, அந்த புலிக்குட்டிக்கு பாகுபலி என்ற பெயரை சூட்டினர்.
மற்றப் புலி குட்டிகளுக்கு குந்தன், அடிஷா, சாஹில், விக்கி, சினு, மவுசுமி ஆகிய பெயர்கள் சூட்டப்பட்டன. இதற்கான விழாவில் ஒடிசா மாநில வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பிஜய்ஸ்ரீ ரவுத்ரி கலந்துகொண்டார்.