February 6, 2017 தண்டோரா குழு
தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அனுப்பிய ராஜிநாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது என தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவ் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகை திங்கட்கிழமை வெளியிட்டுள்ள குறிப்பில், “ஓ. பன்னீர்செல்வம் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக பிப்ரவரி 5-ம் தேதி தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவுக்கு அனுப்பிய கடிதம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் பதவி ஏற்கும் வரை, அதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை, ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதலமைச்சர் பொறுப்பில் தொடருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் தமிழக சட்டப் பேரவை கட்சித் தலைவராக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து தமிழக முதலமைச்சர் பதவியை ஓ. பன்னீர்செல்வம் ராஜிநாமா செய்துவிட்டார். “எனது சொந்த காரணங்களுக்காக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று ஆளுநருக்கு அவர் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் மாளிகையில் பிப்ரவரி 9-ம் தேதி தமிழகத்தின் 21-வது முதலமைச்சராக வி.கே. சசிகலா பதவியேற்கப் போகிறார் என அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.