April 19, 2016 தண்டோரா குழு
கசகசா என்னும் உணவுப் பொருளை கொண்டு தயாரிக்கப்படும் கேக்குகளை உண்டால் அவர்களுக்குச் சிறை தண்டனை அளிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. பயப்பட வேண்டாம் இந்தியாவில் இல்லை மலேசியாவில்.
கசகசா என்னும் உணவு பொருளை கொண்டு தயாரிக்கப்படும் கேக்குகளை சாப்பிட்டு சோதனையின் போது உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு எதிராக நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று போதை மருந்து தடுப்பு குற்றப் புலனாய்வுத் துறை தலைவர் வான் அப்துல்லா இஷாக் எச்சரித்து உள்ளார்.
மேலும், இந்த உணவை உண்டது உண்மை என்று சிறுநீர் சோதனை மூலம் நிருபமானால் அபாயகரமான போதைப் சட்டம் 1952ன் கீழ் இரண்டு வருடச் சிறை தண்டனை அல்லது 1,285அமெரிக்க டாலர் அபராதம் வசூலிக்கப்படும் என்றும், கசகசா விதைகள் இந்தியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் உணவு பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதை மலேசியாவில் உபயோகிப்பது சட்டவிரோதமானது என்றும் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் கசகசா உபயோகிப்பது சட்ட விரோதம் என்பதால்
விற்பனையை அதிகரிக்க கேக்குகளில் அவை சேர்க்கப்படுவதாய் காவல் துறை அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளனர். மேலும் 5 கிலோவிற்குக் குறைவாக கசகசாவை வைத்திருக்கும் நபர்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் இஷாக் தெரிவித்தார்.
சந்தேகத்தின் பெயரில் விமான பயணிகளிடம் உள்ள கேக்குகளை சோதனை செய்யும் போது, அவற்றில் போதை பொருளான மோர்பின் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது எலுமிச்சை கசகசா கேக் வெளிப்படையாக விற்கப்படுகிறது. இதை அதிக அளவில் உண்ணும் நபர்கள் போதை நிலையில் காணப்படுவதால், இந்த மாதிரியான உணவு பொருள்களில் உள்ள மருந்துகள் என்ன என்று கண்டுபிடிக்க மலேசிய வேதியியல் துறைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் இஷாக் தெரிவித்துள்ளார்.