September 27, 2021 தண்டோரா குழு
கடலூர் மாவட்டத்தில் சாயம் பதப்படுத்தும் ஆலை பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஆலை செயல்பட தொடங்கினால் தமிழகத்தில் ஜவுளி பொருட்களின் விலை குறையும் என்று சைமா அமைப்பின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள ரவி சாம் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) 62 வது பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதன்படி, கோவை அத்வைத் டெக்ஸ்டைல்ஸ் நிர்வாக இயக்குனர் ரவி சாம் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத்தலைவராக சிவா டெக்ஸ்யார்ன் நிர்வாக இயக்குனர் சுந்தரராமன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உப தலைவராக துரை பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சைமாவின் புதிய தலைவர் ரவி சாம் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
அரசுக்கு ஜவுளித் துறை மூலம் வருவாய் அதிகமாக கிடைத்து வருகிறது. வேலை வாய்ப்பு அதிகமாக ஏற்படுத்தித் தரும் துறையாக ஜவுளித் துறை செயல்பட்டு வருகிறது. இதனால் மத்திய அரசும் மாநில அரசும் தற்போது ஜவுளித்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியுள்ளன. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி அதிகரிக்க வரியை குறைக்க வேண்டும், அப்பொழுது அண்டை நாடுகளுடன் போட்டியிட்டு இந்தியாவில் ஜவுளித்துறை இன்னும் வேகமாக வளர்ச்சி அடையும்.
தமிழகத்தில் பஞ்சுக்கு விதிக்கப்பட்ட ஒரு சதவீத செஸ் வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. சி.சி.ஐ அமைப்பு தமிழகத்தில் 5 இடங்களில் பருத்தி குடோன் அமைக்க முன்வந்துள்ளது. இதில் முதல் குடோன் கோவையில் அமையவுள்ளது. இது அமைந்தால் வெளியூர்களுக்குச் சென்று பஞ்சு வாங்கும் நிலைமை இருக்காது.கொரோனா காலகட்டத்தில் மற்ற துறைகளைக் காட்டிலும் ஜவுளித்துறை நன்றாகவே இயங்கி வருகிறது. இந்த தீபாவளியை எதிர் நோக்கி காத்திருக்கிறோம்.
கடலூர் மாவட்டத்தில் சாயம் பதப்படுத்தும் ஆலை அமைக்கப்பட்டு வருகிறது.இதனால் கடல் நீருக்கு எந்த ஆபத்தும் கிடையாது.சாயக்கழிவுகளை முறையாக சுத்திகரித்து அதில் உள்ள உப்புகளை மட்டுமே கடலில் செலுத்த உள்ளோம்.இந்த ஆலை அமைந்தால் தமிழகத்தில் தயாரிக்கப்படும் ஆடைகள் வெளியூர்களுக்குச் சென்று சாயமேற்றும் நிலைமை மாறும்.இதனால் ஆடைகளின் விலையும் குறையும்.
கிரீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து கீசா மற்றும் பிமா என்ற இரண்டு வகை பஞ்சுகளை இறக்குமதி செய்கிறோம். ஆனால் அதற்கு அரசு 10 சதவீத வரி விதித்துள்ளது. அவ்வகை பஞ்சுகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவது குறைவு. எனவே இந்த வரியை குறைத்து அதன் மூலம், ஜவுளித்துறையினர் இறக்குமதி செய்தால் இங்குள்ள விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே இந்த வரியை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.