March 12, 2022 தண்டோரா குழு
கோவையில் கொரோனா பாதிப்பு குறைந்தாலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் எந்த சமரசமூம் இன்றி மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடைத்தெருக்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோவை ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் வீதி, டவுன்ஹால், 100 அடி சாலை, காந்திபுரம் உள்ளிட்ட கடைத்தெரு பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அதனையும் மீறி மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அடுத்து மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
வணிகர்கள் தங்களது கடைகளில் தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்ட அளவே மக்களை அனுமதிக்க வேண்டும். குறிப்பாக 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். கொரோனா தடுப்பு விதிமுறைகளை மக்களும், வணிகர்களும் தவறாது பின்பற்ற வேண்டும். மாநகராட்சி சார்பாக கொரோனா பரவலை தடுக்க அமைக்கப்பட்ட பறக்கும் படைகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.