March 12, 2016 வெங்கி சதீஷ்
தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி பிரச்சாரங்களும், பேனர்களும் தூள் பறக்கும் நிலையிலும் கிட்டதட்ட 50 வருட காலமாக இரண்டு கிராமங்கள் கட்சிக் கொடிகள், சுவர் விளம்பரங்களை அனுமதிக்காமல் இருந்து வருவது பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே அமைந்துள்ள இந்த அதிசய கிராமங்களில் ஒன்றான குப்பிச்சிபாளையம் ஒரு கட்சி போஸ்டர்கள் கூட ஒட்டப்படாமல் சுத்தமாக காட்சி அளிக்கிறது.
இந்த கிராமத்தில் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. கடந்த 50 ஆண்டுகளாக அரசியல் கட்சிகள் தொடர்பான பொதுக்கூட்டம், பிரசாரங்கள் என எதுவும் இங்கு நடப்பது இல்லை.
வாகன பிரச்சாரம் மட்டுமே:
இந்த கிராமத்தில் கட்சி கொடிக்கம்பங்களும் இல்லை, சுவர்களில் பிரசார வாசகங்கள் எதுவும் எழுதப்படுவதும் இல்லை. சட்டமன்ற, நாடாளுமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தலின் போது கூட இந்த கிராமத்தில் வாகன பிரசாரம் மட்டுமே நடக்கும்.
கட்சி விளம்பரங்களுக்கு நோ அனுமதி:
தேர்தல் நேரத்தில் மட்டுமல்லாது எப்போதுமே கட்சி சார்பான விளம்பரங்களுக்கு அனுமதி வழங்காத இக்கிராமம் தமிழகத்தில் ஒரு அதிசய கிராமமாகவே பார்க்கப்படுகிறது.
தேர்தல் கட்டுப்பாடுகள்:
இதுகுறித்து அக்கிராமத்தினர், ‘தற்போதுதான் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுவர் விளம்பரங்கள் எழுதக்கூடாது என்றும், ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அனுமதி பெற்று சுவர் விளம்பரங்கள் செய்யலாம் என்றும் கட்டுப்பாடுகள் வந்து உள்ளன.
50 ஆண்டுகளாக இதுதான்:
ஆனால், எங்கள் கிராமம் அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் கிராமப்பெரியவர்கள் ஒன்று கூடி இந்த முடிவை எடுத்து உள்ளனர். அந்த முடிவை நாங்கள் இதுவரை தொடந்து கடைபிடித்து வருகிறோம்.
பிரச்சார வாசகங்கள் வேண்டாம்:
எங்கள் ஊருக்குள் அரசியல் தொடர்பான கொடிக்கம்பங்கள் நட அனுமதியில்லை. அதுபோன்று சுவர்களிலும் தேர்தல் பிரசார வாசகங்கள் எதுவும் இடம்பெறக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
அமைதியாக இருக்கின்றோம்:
உள்ளாட்சி தேர்தலின்போது, நாங்கள் அனைவரும் ஒன்று கூடி, எங்களுக்குள் ஒரு பிரதிநிதியை தேர்வு செய்து வெற்றி பெறச்செய்வோம். இதனால், ஒவ்வொரு தேர்தலின் போதும் எங்கள் கிராம மக்கள் எவ்வித கருத்து வேறுபாடுகளும் இல்லாமல் அமைதியாக இருக்க முடிகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்ணைப்பட்டியிலும்:
இதேபோன்று திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே அமைந்துள்ள எ.பண்ணைப்பட்டி என்கின்ற கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருக்கின்றனர். இங்கும் கடந்த 40 ஆண்டுகளாக எந்த சுவர் விளம்பரங்களும் அனுமதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.