February 8, 2017 தண்டோரா குழு
தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா முதலமைச்சர் ஆவதற்கு ஆதரவு தெரிவித்த 129 சட்டப் பேரவை உறுப்பினர்கள் கட்சியின் கட்டுப்பாட்டில் தனியாக வைக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் அனைவரும் சென்னையில் இரு வேறு நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கட்சித் தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தும் வகையில் செவ்வாய்க்கிழமை இரவு பேட்டியளித்தார். அதையடுத்து சசிகலா தலைமையில் சென்னை ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த அவசர ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த 130 எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஆனால், செய்தியாளர்கள் தரப்பில் 129 எம்.எல்.ஏ-க்கள் தான் கலந்து கொண்டதாகச் சொல்லப்படுகிறது. எனினும், 110 எம்.எல்.ஏக்கள் மட்டுமே கலந்து கொண்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறின.
இதனிடையே, ஓ. பன்னீர்செல்வம், “எனக்கு எம்.எல்.ஏக்களின் முழு ஆதரவும் கிடைக்கும். அதற்கான சூழ்நிலைகள் மாறும்” என்று செய்தியாளர்களிடம் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
இதனால், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, “எம்.எல்.ஏக்கள் அனைவரும் சென்னையைவிட்டுச் செல்லக்கூடாது” என்று உத்தரவிட்டுள்ளார்.
எம்.எல்.ஏக்கள் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துவிடுவார்கள் என்று கருதுவதால், வீட்டுச் சிறை வைப்பதுபோல் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இரண்டு நட்சத்திர ஓட்டல்களில் 60 அறைகள் எடுத்து, அறைக்கு இரண்டு பேர் வீதம் எம்.எல்.ஏ-கள் தங்க வைக்கபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அங்கு தங்கியுள்ள எம்.எல்.ஏ.க்கள் கைபேசியைப் பயன்படுத்தக் கூடாது என்பன போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.