January 10, 2017 தண்டோரா குழு
கட்டாய விடுமுறை நாட்களின் பட்டியலில் பொங்கல் பண்டிகை தொடர்ந்து நீடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் வைகோ கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் வாழுகின்ற தமிழர்களுக்கு மட்டும் அல்ல, உலகம் முழுமையும் வாழுகின்ற அனைத்துத் தமிழர்களுக்கும் கவலையை ஏற்படுத்தி இருக்கின்ற ஒரு பிரச்சினையை, கனத்த இதயத்தோடு தங்களது உடனடிக் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழர்கள் கொண்டாடி வருகின்ற பண்பாட்டுத் திருவிழா தைப்பொங்கல் நன்னாள் ஆகும். இது உழவர்களின் திருநாள். இந்து, முஸ்லிம், கிறித்துவர் என அனைத்துத் தமிழர்களும் உணவு தானியங்களை விளைவித்துத் தருகின்ற இயற்கைக்கும், உதவியாக இருக்கின்ற கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கின்ற வகையில் இந்தத் திருநாளைக் கொண்டாடுகின்றனர்.
ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 14 அல்லது 15 ஆம் தேதியில் தைப் பொங்கல் கொண்டாடப்படுகின்றது. இதுவரையிலும் மத்திய அரசின் கட்டாய விடுமுறைப் பட்டியலில் இடம் பெற்று இருக்கின்றது. அந்தப் பட்டியலில் இருந்து பொங்கலை நீக்கி, விருப்பம் உள்ள பகுதிகளில் விடுமுறை நாளாகக் கொண்டாடக் கூடிய பட்டியலில் சேர்த்து இருப்பதாக வெளியாகி இருக்கின்ற தகவல் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.