February 25, 2017 தண்டோரா குழு'
குழந்தைகள் பெற்றோர்களின் விருப்பத்திற்கும் எதிர்பார்ப்புக்கும் வித்தியாசமாகச் செயல்படுவதைப் பார்த்திருப்போம். சில போட்டிகளுக்குத் தயார் செய்து அனுப்பியிருப்போம். ஆனால், போட்டியிலிருந்து திரும்பிய பிறகு அவர்கள் சொல்லும் கதை வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கும்.
கிட்டத்தட்ட அதைப் போல்தான் நைஜீரியாவில் இரண்டு வயது சிறுவனுடைய செயல் உள்ளது. ஈமோ என்ற பச்சிளம் பாலகனின் சுவையான நிகழ்வு குறித்து அவனது தந்தை உம்ரேன் மகனின் போட்டோவுடன் இச்செய்தியை “ட்விட்டர்” மூலம் பதிவிட்டிருக்கிறார்.
“என்னுடைய மகன் ஓட்டப் பந்தயத்தில் ஓடிக்கொண்டிருந்தான். இறுதிப் பகுதியை அவன் நெருங்கியபோது, நான் அவனைப் புகைப்படம் எடுப்பதைப் பார்த்து விளையாட்டை மறந்துவிட்டான். உற்சாகத்துடன் என்னைக் கட்டியணைக்க என்னை நோக்கி ஓடிவந்தான்.
வெற்றிக்கு சில அடிகள் இருப்பதை அவனுக்கு உணர்த்தும் வகையில் வரவேண்டாம். இறுதிப் பகுதியை நோக்கி ஓடு என்று கூறினேன். ஆனால், சின்னஞ்சிறுவன் என்பதால் அதை அவனால் புரிந்துகொள்ள இயலவில்லை. அது மட்டுமின்றி, ஒரு போட்டியில் பங்கேற்கிறோம். வேகமாக ஓடி ஜெயிக்க வேண்டும் என்பதை அவன் உணரவில்லை.என்னை நோக்கி வந்து, கட்டியணைத்து முத்தமிட்டான்.
வீட்டில் நாங்கள் அவனுக்கு ஓட்டப் பந்தயப் பயிற்சி அளிக்கும்போது, என்னுடைய கைகளை நோக்கி ஈமோ ஓடி வருவான். ஒரு வேளை அதே பழக்கத்தால்தான் என்னிடம் ஓடி வந்துவிட்டான் என்று எண்ணினேன். ஓடி வந்து கட்டியணைப்பது அவனுக்குப் பிடிக்கும். போட்டியின் முடிவில் அவ்வாறு செய்வது இயல்பானதுதான்.
ஈமோ என்னை நோக்கி ஓடிவந்தபோது, அவனை மறுபடியும் போட்டியில் ஓட வைக்கவேண்டும் என்பதற்காக என்னிடம் வரவேண்டாம் என்றேன். ஆனால், எதற்காக நிற்க வேண்டும் என்று இமோவிற்கு புரியவில்லை. சிரித்துக்கொண்டே என்னிடம் ஓடி வந்தான். போட்டியின் கடைசி இடத்திற்கு ஓட வேண்டும் என்று கூறியபோது, அது ஒரு போட்டி என்று அவன் உணரவில்லை என்று தோன்றியது.
இது அவனுடைய முதல் போட்டி. அதனால் தினமும் வீட்டின் முன் நாங்கள் ஒத்திகை பார்த்து வந்தோம். போட்டியின் ஆரம்பத்தில் நன்றாக ஓடினான். நான் அவனை புகைப்படம் எடுப்பதை பார்த்தவுடன் என்னிடம் ஓடி வந்துவிட்டான்.
இறுதியில், இமோ மீண்டும் போட்டியில் ஒடி நான்காவது இடத்தை அடைந்தான். ஆனால், அவனுக்கு மூன்றாவது பரிசு கிடைத்தது”.இப்படிக் குறிப்பிட்ட ஈமோவின் தந்தை உம்ரேன், “என் இதயத்தை ஜெயித்துவிட்டான்” என்று நெகிழும் வகையில் குறிப்பிட்டிருக்கிறார்.உம்ரேன் பதிவிட்ட ட்விட்டுக்கு 11,௦௦௦ லைக்குகளும் 6,400 மறு ட்விட்டும் வந்துள்ளன.
“ஈமோ அருமையான குழந்தை. அவன் எனக்கு மகனாக இருப்பது நான் அதிர்ஷ்டம். ஒருமுறை அவனுக்குக் கணித எண்களை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அவன் அதைப் புரிந்துகொள்ள சிரமப்பட்டான். இதனால், நான் கவலையடைந்ததை என் முகத்தைப் பார்த்த அவன், “ஸாரி அப்பா!” என்று சொல்லி கட்டிப் பிடித்துக் கொண்டான்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் உம்ரேன்.
இமோவின் தந்தை திரைப்பட இயக்குநராகப் பணிபுரிகிறார். தென்கிழக்கு ஆசிய நாடான லாவோஸில் வசித்து வருகிறார்.
அவரது மகன் ஈமோ சமீபத்தில்தான் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்துள்ளான். இந்த வாரம் அவனுடைய பள்ளியில் விளையாட்டு போட்டி நடைபெற்றது. அவன் குழந்தைகளுக்கான போட்டியில்தான் அவன் பங்கேற்றான்.