December 21, 2021 தண்டோரா குழு
கோவை மாவட்ட எல்லைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்தே 24 மணி நேரமும் கண்காணிக்கும் பொருட்டு வீடியோ வால் பொருத்தப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
கோவை மாவட்டம், புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் மாவட்ட கனிம அறக்கட்டளையின் 5சதவீதம் நிதியின் மூலம் கோவை மாவட்டத்தில் கனிம வளக்கடத்தலை தடுக்க மாநில மற்றும் மாவட்ட எல்லை பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் கண்காணிக்குமாறு அரசாணை வெளியிடப்பட்டதை தொடர்ந்து, ஆனைகட்டி, மாங்கரை, வாளையார், வேலந்தாவளம், வீரப்பகவுண்டனூர், கோபாலபுரம், நடுப்புனி, வடக்கு காடு, மீனாட்சிபுரம், செம்மனாம்பதி மற்றும் வலுக்குபாறை ஆகிய 11 மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் தொடர்புடைய சாதனங்கள் என ஒவ்வொரு எல்லைகளில் கேமராக்கள்
பொருத்தப்பட்டுள்ளது. பொருத்தப்பட்ட கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் மாவட்ட எல்லைகளின் செயல்பாடுகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
மேலும், மாவட்ட எல்லைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்தே 24 மணி நேரமும் கண்காணிக்கும் பொருட்டு வீடியோ வால் பொருத்தி செயல்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.