December 24, 2022 தண்டோரா குழு
கோவையை தலைமையிடமாக கொண்டு, 50 ஆண்டுகளை கடந்து காபி துறையில் தனித்துவம் கொண்ட கண்ணன் ஜூப்ளி காபி கம்பெனி இன்று (24.12.22) தனது 16 புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்தது.
கண்ணன் ஜுபிலி காபி கம்பெனியின் நிர்வாக இயக்குனர் A.K. ஜெயக்குமார் மற்றும் நிறுவனத்தின் பார்ட்னர் J.ஷங்கர் கிருஷ்ணன் இந்த புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து பத்திரிகையாளர்களிடம் நிறுவனத்தின் எதிர்கால விரிவாக்க திட்டங்கள் பற்றி கலந்துரையாடினர்.
நிகழ்வில் ஷங்கர் கிருஷ்ணன் பேசுகையில்:-
1971ல் கோவை ரங்கே கவுண்டர் வீதியில் தரமான காபி தூளை மக்களுக்கு வழங்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட எங்கள் நிறுவனம் படிப்படியாக வளர்ந்து தற்போது தமிழகம், ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் 70 விற்பனை மையங்களை கொண்டுள்ளது. அண்மையில் தான் இது பொன் விழா கண்டது.
தற்போது நாங்கள் தரமான இன்ஸ்டன்ட் காபி தூள், சுக்கு காபி தூள், காபி டிப், காபி டிகாஷன் போன்ற புது காபி தயாரிப்புகளுடன், பல வகை ஊறுகாய், பருப்பு சாத பொடி, இட்லி மிளகாய் பொடி மற்றும் உடனே சாதத்தில் பிசைந்து சாப்பிட கூடிய ‘ரெடி மிக்ஸ்’ தயாரிப்புகளையும் அறிமுகப்படுத்தி உள்ளோம்.
வலுவான டிஸ்ட்ரிபியூட்டர்கள், டீலர்களுடன் இணைந்து வரும் தை மாதத்தில் தமிழகம், ஆந்திரா, கேரளா சந்தைகளில் இந்த புது தயாரிப்புகள் கிடைக்கும்படி செய்ய உள்ளோம். விரைவில் நாம் வடஇந்தியாவிலும் கால் பதிக்க இருக்கிறோம், என்றார்.
2008 வரை கோவையில் 16 விற்பனை மையங்களை கொண்டிருந்த இந்த நிறுவனம் அதற்கு பின்னர் தொடர்ச்சியாக தன்னுடைய விற்பனை மையங்களை அதிகப்படுத்தி, தமிழகத்தை தாண்டி ஆந்திரா, கேரளாவில் கால் படித்தது இன்று மொத்தம் 70 விற்பனை மையங்களை கொண்டு வாடிக்கையாளர்களின் தேவைகளை சந்தித்து வருகிறது.
அத்துடன் கல்வி நிறுவனங்களில், கார்ப்ரேட் நிறுவனங்களில், ஹோட்டல்களில் கண்ணன் ஜுபிலி காபி கிடைத்திடும் வழி வகுக்கப்பட்டது. ஏற்றுமதியும் பல நாடுகளுக்கு செய்யப்பட்டது.
தற்போது 70 வதாக உள்ள விற்பனை மையங்களை 140 ஆக வரும் 3 ஆண்டுகளில் உயர்த்திட திட்டங்கள் உள்ளது. அதே போல் புது டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களில் கால் பதிக்கவும், விற்பனை மையங்களை நிறுவவும் திட்டங்கள் உள்ளது.