August 20, 2023
தண்டோரா குழு
ஈரோட்டைச் சேர்ந்த 2 சிறார்கள் உட்பட 5 பேர் கன்னியாகுமரியில் இருந்து அந்தியூர் வரை குதிரையில் பயணித்து இந்தியா புத்தகத்தில் இடம்பிடித்தனர். அவர்களுக்கு கோவையில் இண்டிஜினியஸ் ஹார்ஸ் சொசைட்டி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
இண்டிஜினியஸ் ஹார்ஸ் சொசைட்டி என்ற அமைப்பினர் உள்நாட்டு குதிரைகளை மேம்படுத்துதல், பாதுகாத்தால் மற்றும் அங்கீகாரம் பெற்றுத்தருதல் ஆகிய பணிகளை கடந்த 2019ம் ஆண்டு முதல் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே வருங்கால தலைமுறையினர் உள்நாட்டு குதிரை இனங்களை பாதுகாக்கவும், வளர்க்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இண்டிஜினியஸ் ஹார்ஸ் சொசைட்டி மற்றும் ஈரோடு நிலா குதிரை பயிற்சி பள்ளி இணைந்து குதிரை சவாரியை நடத்தின.
ஈரோட்டைச் சேர்ந்த சுபத்ரா என்ற 12 வயது சிறுமி, மனவ் சுப்ரமணியன் என்ற 11 வயது சிறுவன், உட்பட பிரியதர்ஷினி ரங்கநாதன் (32), கவுதமன் மேவாணி வெற்றி கண்ணன் (33) மற்றும் சுவாதி விக்னேஷ்வரி (32) ஆகிய ஐந்து பேர் இந்த குதிரை சவாரியில் கலந்து கொண்டனர்.
கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி கன்னியாகுமரியில் இந்த குதிரை சவாரி பயணத்தை நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து 10 நாள் பயணத்தில் மொத்தம் 497 கிலோ மீட்டர் தொலைவை குதிரை சவாரியிலேயே கடந்து கடந்த 8ம் தேதி ஐந்து பேரும் அந்தியூர் குதிரை சந்தையை வந்தடைந்தனர்.
இவர்களது சாதனையை இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட் அங்கீகரித்து சாதனை புத்தகத்தில் இடம்பெறச் செய்துள்ளது. இந்த சூழலில் குதிரை சவாரி பயணம் மூலமாக சாதனையை மேற்கொண்ட 5 பேருக்கும் இண்டிஜினியஸ் ஹார்ஸ் சொசைட்டி சார்பில் கோவையில் உள்ள குதிரைப்பந்தய மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் குதிரை ஆர்வலர்கள், பந்தய வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சாதனையாளர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.