April 29, 2016
தண்டோரா குழு
கமலஹாசனின் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் வரும் மே 16ம் தேதி தொடங்கவுள்ளது.
இப்படத்திற்கான துவக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய கமல்ஹாசன்,
எனது சபாஷ் நாயுடு படப்பிடிப்பு, மே 16ம் தேதி தொடங்குகிறது. அதற்காக ஷூட்டிங்கிற்கு அமெரிக்கா செல்ல இருப்பதால் இந்தச் சட்டமன்ற தேர்தலில் நான் வாக்களிக்க மாட்டேன் என்று தெரிவித்தார்.
மேலும், சென்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச் சாவடிக்கு போன போது என் வாக்கினை வேறு யாரோ போட்டு விட்டுச் சென்றனர். இந்த முறை வாக்களிப்பதற்காகக் கேட்டேன். வாக்காளர் பட்டியலில் என் பெயரே இல்லை என்று கூறி விட்டார்கள்.
இத்தனைக்கும் தேர்தல் ஆணைய அதிகாரி என் நெருங்கிய நண்பர். இருந்தும் என்ன செய்வது? என்று கூறியுள்ளார். இதனால் இம்முறை நான் வாக்களிக்க மாட்டேன் எனக் கூறியுள்ளார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் கமலஹாசனுக்கு டிவிட்டரில் பதில் அளித்துள்ளது.
அதில் நீங்கள் எல்லோருக்கும் முன்மாதிரி ஆகையால் நீங்கள் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளதோடு, அவர் மற்றும் அவரது துணைவி கவுதமி ஆகியோரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பதைப் படத்துடன் வெளியிட்டுள்ளது. மேலும் இதில் நூறு சதவிகித வாக்குப்பதிவு அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்தப் பிரச்சனையை கையிலெடுத்த சமூக வலைத்தள விமர்சகர்கள். கமலுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பேசி வருகின்றனர்.
குறிப்பாக இந்திய அரசின் கனவு திட்டமான ஸ்வாட்ச் பாரத் திட்டத்தின் தூதுவராக உள்ள ஒருவர் தேர்தல் ஆணையம் குறித்து இவ்வாறு வெளிப்படையாகக் குற்றம் சுமத்துவது அழகல்ல என்றும்,
தேர்தல் ஆணையர் நண்பர் என்றால் நேரில் தெரிவித்து பிரச்சினையை முடிப்பதை விட்டுவிட்டுப் பட துவக்க விழாவின் பொது ஒரு விளம்பரம் தேடும் வகையில் இதை வெளிப்படுத்தியது உள்நோக்கம் எனக் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஆனால் ஆதரவு தெரிவித்து பேசுவோர், ஒரு பிரபலத்திற்கே இந்த நிலை என்றால் சாமானியருக்கு என்ன கதியோ எனப் பயமாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளனர்.
ஆனால் வாக்காளர் பட்டியலில் கமலின் படம் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் அதைப் பார்க்காமல் கூறியிருப்பது மிகப்பெரிய தவறு என்பது பொதுவான கருத்தாக உள்ளது.
தேர்தல் ஆணையத்திற்கு மதிப்பளித்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற படப்பிடிப்பை ரத்து செய்து வாக்களிப்பாரா கமல்? என்பதே தற்போது தமிழகத்தின் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.