June 30, 2017 தண்டோரா குழு
அ.தி.மு.க.வில் கருத்து வேறுபாடு இருந்தாலும்அனைவரும் ஒரே பாதையில் தான் செல்கிறோம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;
“ஜி.எஸ்.டி., வரி விதிப்பு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதால் இன்று நள்ளிரவு முதல் அது அமலுக்கு வருகிறது. இதற்காக இன்றிரவு நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டத் தொடரும் நடைபெறவுள்ளது எனவே ஜி.எஸ்.டி.பற்றி பேசி இனி பிரயோஜனம் இல்லை.
இதை ஆரம்ப நிலையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எதிர்த்தார். அவர் மாநில அரசுகளை பாதிக்கும் என்றார். ஆனால் தற்போது ஜி.எஸ்.டி.யில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது. மாநில அரசுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் வேறு வழியின்றி இதனை ஏற்றுக் கொண்டோம். மாநில அரசுக்கு நிதி ஒதுக்கீடு மற்றும் வருமானம் கிடைக்கும் என்பதால் தான் இது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பு மசோதாவை முதலில் கொண்டு வந்தது காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி அரசுதான். ஆனால் அவர்களே இப்போது எதிர்க்கிறார்கள்.
அ.தி.மு.க.வில் கருத்து வேறுபாடு இருந்தாலும் நாங்கள் அனைவரும் ஒரே பாதையில் தான் செல்கிறோம்.”
இவ்வாறு அவர் கூறினார்.