February 10, 2022
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி நகராட்சி, சூலூர் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் வாக்கு எண்ணும் மையங்களில் கலெக்டர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் கடந்த இரண்டு நாட்களாக மாவட்ட கலெக்டர் சமீரன் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி கருமத்தம்பட்டி நகராட்சி வாக்கு எண்ணும் மையமான எஸ்டி ஜோசப் பெண்கள் உயர்நிலைப்பள்ளியிலும், சூலூர், கண்ணம்பாளையம், இருகூர், பள்ளபாளையம் பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணும் மையமான சூலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணும் அறை, வாக்கு எண்ணிக்கையின் போது வேட்பாளர்களின் முகவர்கள் உரிய வழியில் சென்று வர ஏதுவாக தடுப்புகள் அமைப்பது, பாதுகாப்பு ஏற்பாடுகள், குடிநீர், கழிப்பிடம், மின்வசதி ஆகிய வசதிகளை ஏற்படுத்திட வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார்.
இவ்வாய்வில் கருமத்தம்பட்டி நகராட்சி கமிஷனர் முத்துசாமி, வருவாய் கோட்டாட்சியர் இளங்கோ மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.