December 27, 2016 தண்டோரா குழு
கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.2,850 விலை நிர்ணயம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார்.
இது தொடர்பாக ஓ. பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நடப்புப் பருவத்தில் கரும்புக்கான மாநில அரசின் பரிந்துரை விலையை நிர்ணயம் செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
நடப்பு 2016-17 கரும்பு பருவத்திற்கு நியாயமான மற்றும் ஆதாய விலையாக டன் ஒன்றுக்கு ரூ.2,300 என மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டு நிர்ணயித்த அதே தொகையான ரூ.2,300 என மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. அண்டை மாநிலமான கர்நாடகத்தில் பெரும்பாலான ஆலைகள் டன் ஒன்றுக்கு ரூ.2,600 வழங்கி வருகின்றன. அதே போன்று மகாராஷ்டிரத்தில் பெரும்பாலான ஆலைகள் டன் ஒன்றுக்கு ரூ.2,475 வழங்கி வருகின்றன.
கரும்பு விவசாயிகளின் நலன் கருதி, கடந்த ஆண்டு நிர்ணயித்ததைப் போலவே, மாநில அரசு பரிந்துரை விலையாக, போக்குவரத்துச் செலவு 100 ரூபாய் உட்பட, 2,850 ரூபாய் என விலை நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசு நிர்ணயித்த ஆதாய விலையான 2,300 ரூபாய் என்பதற்குப் பதில் தமிழக கரும்பு விவசாயிகள் டன் ஒன்றுக்கு 2,850 ரூபாய், அதாவது கூடுதலாக 550 ரூபாய், பெற வழி வகை ஏற்படும்.
மேலும் கரும்பு உற்பத்தித் திறனை உயர்த்தவும், சொட்டு நீர்ப்பாசன வசதிகளை கரும்பு விவசாயத்திற்கு அதிக அளவில் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேளாண்மைத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கரும்பு விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கவும், சர்க்கரை ஆலைகளின் லாபத்தில் உரிய பங்கு பெறும் வகையிலும் கரும்பு விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக அரசுக்கு உரிய பரிந்துரைகளை அளிக்க விவசாயிகள், சர்க்கரை ஆலை பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கொண்ட ஒரு குழுவை அமைத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.