July 6, 2017
தண்டோரா குழு
கர்நாடகாவில் தாலியில் பவள மணி இருந்தால், கணவருக்கு ஆபத்து வரும் என்று எழும்பிய புரளியால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக மாநிலத்தில் தாலியில் பவள மணியை அணிவது வழக்கம். ஆனால், செவ்வாய்க்கிழமை(ஜூன் 4) இரவு, பெண்களின் தாலியில் பவள மணி இருந்தால், புதன்கிழமை அவர்களுடைய கணவருக்கு ஆபத்து வரும் என்று யாரோ புரளியை எழுப்பியுள்ளார்கள். இதை கேட்ட பெண்கள், தங்கள் கணவருக்கு ஆபத்தோடு, மரணமும் ஏற்படும் என்று நம்பத்தொடங்கினர்.
இதையடுத்து, கர்நாடக மாநிலத்தின் கோப்பல், சித்திரதுர்கா, பல்லாரி, தவான்ஜெரே மற்றும் ராய்ச்சூர் மாவட்டத்தின் பெண்கள் தங்கள் கணவரை காப்பாற்ற தங்கள் தாலியிலிருந்த பவள கற்களை கற்களால் நொறுக்கினர், சிலர் தங்கள் தாலியை கழற்றி வைத்துவிட்டனர்.
இதனையடுத்து பெண்கள் இந்த புரளியை நம்பவேண்டாம் என்று அம்மாநில அரசின் பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வதந்திகளை பரப்புவோரை கைது செய்யவும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று துணை ஆணையர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
“அதேபோல் கர்நாடக மாநிலத்தில் சுமார் 2௦ ஆண்டுகளுக்கு முன் விநாயகர் சிலை பால் குடிக்கிறது என்று புரளி கிளம்பியது. இதை யார் கிளப்பினார்கள் என்று இன்றுவரை தெரியவில்லை. பவள கல்லுக்கும் மனித உயிருக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. பல நூற்றாண்டுகளாக பெண்களின் பவள கல்லை தங்கள் தாலியில் அணிந்து வருகின்றனர்” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.