January 5, 2017 தண்டோரா குழு
கர்நாடக மாநிலத்திற்கு ரூ.1,782.44 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பருவ மழை பொய்த்ததால், 40 வருடங்களில் இல்லாத அளவிற்கு மாநிலம் முழுவதும் வறட்சி நிலவுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனால், அணைகளில் போதிய தண்ணீர் இல்லை எனவும், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை விட்டது.
இதன் காரணமாக கடந்த அக்டோபர் 19ம் தேதி கர்நாடகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக மாநில அரசு அறிவித்தது. மொத்தமுள்ள 176 தாலுகாக்களில் 139 தாலுகாக்கள் வறட்சி பாதித்தவை எனவும் அறிவிக்கப்பட்டது.
கார்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சி குழுவினர் தில்லி சென்று பிரதமர் மோடியைச் சந்தித்து கர்நாடக மாநிலத்திற்கு ரூ. 4,702 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மத்திய குழு கர்நாடகம் வந்து மாநிலம் முழுவதும் ஆய்வு செய்து மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது.
இந்நிலையில், ராஜ்நாத் தலைமையில் மத்திய அமைச்சரவைக் குழு தில்லியில் வியாழக்கிழமை ஆலோசனை செய்தது. இந்த கூட்டத்தில் கர்நாடகத்திற்கு ரூ.1,782.44 கோடி ஒதுக்கப்படுவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், கர்நாடகம் மற்றும் உத்தரா கண்ட் மாநிலங்களில் தேசிய ஊரக குடிநீர் திட்டத்தின் கீழ் ரூ.208.91 கோடி ஒதுக்குவது எனவும், இதில் கர்நாடகத்திற்கு ரூ.188.91 கோடியும், உத்தரா கண்ட் மாநிலத்திற்கு ரூ.20 கோடியும் ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டது.