June 27, 2022 தண்டோரா குழு
கற்பகம் பொறியியல் கல்லூரியில் 2017-2018 மற்றும் 2018-2019 கல்வி ஆண்டில் பயின்ற மாணவர்கள் சனிக்கிழமையன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்றனர்.
கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் இராச.வசந்தகுமார் பட்டமளிப்பு விழாவிற்கு தலைமையேற்றார்.இந்த விழாவிற்கு பேராசிரியர் முனைவர் வீ காமகோடி இயக்குனர் (ஐஐடி , சென்னை)முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு பட்டமளிப்பு விழாவில் பேருரை நிகழ்த்தி பட்டங்களை வழங்கினார்.
அவர்தம் உரையில் ,
இளைஞர்கள்,தங்களின் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கொண்டு எத்தகைய சவால்களையும் வரங்களாக மாற்றியமைக்க முடியும் என்றார்.புதிய புதிய தொழில் நுட்பங்களை அறிந்து கொள்ளும் ஆர்வமும், ஆராய்கின்ற திறனையும் வளர்த்துக்கொண்டால் இளைஞர்கள்,தங்களது வாழ்வில் வெற்றி அடையலாம். இனி வருகின்ற காலங்களில் , வெறும் தொற்று மற்றும் இயற்கைப் பேரழிவு அபாயங்களில் இருந்து மக்களை காப்பாற்ற அறிவியலும் தொழில்நுட்பமும் இணைந்து செயல்பட வேண்டியுள்ளது என்பதை இளைஞர்கள் உணர வேண்டும்.
அதற்கேற்ப அவரவர்கள் தங்கள் துறையில் ஆழ்ந்த அறிவைப் பெற்று சமுதாயத்துக்குப் பயனளிக்கும் வகையில் ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். “கல்விப்பயன் என்பது இயற்கையும்மக்களும் ஒருங்கிணைந்த மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற எண்ணம் இளைஞர்களின் மனதில் பிறக்க வேண்டும். அதை கருத்தில் கொண்டு இன்றைய இளைஞர்கள் சமுதாய பொறுப்புணர்வுடன் மற்றும் நாடு போற்றும் படி வாழ்வதற்கு அடிப்படையாக ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடித்து வாழ்வில் வெற்றி அடைய வேண்டும் ” என்ற கருத்தினை அறிவுறுத்தினார்.
மேலும் அறிவியல் வளர்ச்சி ஆக்கப்பூர்வமாக மட்டும் இல்லாமல்,மனித சமுதாயத்தின் அமைதியை நிலைநாட்ட இளைஞர்களின் அறிவும்,ஆற்றலும் பயன்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.மாணவர்கள் இன்று பேரெண்ணிக்கையில்,பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறுகின்றனர் இருந்த போதிலும் , அவர்களின் அறிவை ஆய்வு படிப்புகள் வரையில் மேம்படுத்திக் கொள்பவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதால்,இன்றைய மாணவர்கள் , அரசு தரும் வாய்ப்புகளையும் சலுகைகளும் பயன்படுத்தி அவரவர் தங்களது விருப்பமுள்ள ஆய்வுகளை,காப்புரிமை போன்ற அறிவுசார் செயல்பாட்டைக் கொண்டு தங்களது வருங்கால வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் அவ்வாய்ப்புகளை அவர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்வதற்கு தங்களது இலக்கினை தெளிவாக அறிந்திருத்தலும் , துல்லியமாக அதனை வரையறுத்துக் கொள்ளுதலும்,இலக்கினை சிறந்த செயல் திட்டமாக அமைத்துக் கொள்ளும் செயலாக்கத்திற்கு தளராத மன உறுதியும் கொண்டிருத்தல் எந்நாளும் தேவை என்றார் .
மேலும் இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல இளைஞர்களின் பங்களிப்பு மிக அவசியம் என்று கூறி அனைத்து இளைஞர்களும் தங்கள் வாழ்வில் பயனுற வாழ வேண்டுமென்று வாழ்த்துக் கூறி அவரது உரையை முடித்துக்கொண்டார்.
இந்த விழாவில் கற்பகம் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் தமயந்தி, கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல் அலுவலர்முருகையா, கற்பகம் பொறியியல் கல்லூரியின் முதல்வர்.முனைவர். விஜயகுமார் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர் .