April 12, 2017 தண்டோரா குழு
பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணியின் மர்மமான மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி கடந்த ஆண்டு மார்ச் 6ஆம் தேதி மர்மமான முறையில் கொச்சியில் உள்ள தனியார் விடுதியில் உயிரிழந்தார். உடல்நலக்குறைவால் கலாபவன் மணி இறந்ததாக கூறப்பட்ட நிலையில் அவரது மரணம் குறித்து பல்வேறு சந்தேகம் எழுந்ததால் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில், கலாபவன் மணி மது அருந்தியதாகவும், அவரது உடலில் மெத்தில் ஆல்கஹால் அதிகளவில் இருந்ததால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் எனவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கலாபவன் மணியின் சகோதரர் இது தொடர்பாக புகார் அளித்தார்.அதனடிப்படையில், கலாபவன் மணி மது அருந்தும்போது, அவருடன் இருந்த வேலையாட்கள் விபின், முருகன், அருண் மற்றும் நடிகர்கள் ஜாபர், ஷாபு ஆகியோர் உடன் இருந்ததால் அவர்களிடமும் சாலக்குடி போலீசார் விசாரணை நடத்தினர். எனினும் ஓராண்டாகியும் கலாபவன் மணியின் மரணம் குறித்த விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால், இவ்வழக்கினை சிபிஐக்கு மாற்றி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த விசாரணையை ஒரு மாதத்திற்குள் சிபிஐ துவங்க வேண்டும் எனவும், விசாரணை அதிகாரிகள் குறித்த விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முன்னதாக கலாபவன் மணியின் மனைவி, சகோதரர் உட்பட அவரது உறவினர்கள் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.