December 7, 2021 தண்டோரா குழு
கல்லார்குடி பழங்குடியின மக்களுக்கு தெப்புக்குளமேடு பகுதியில் போதுமான அளவு இடம் ஒதுக்கீடு செய்து வீடு கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்று ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், வால்பாறை கல்லார்குடி பழங்குடியின மக்களின் இடப்பிரச்னை தொடர்பாக வனத்துறை, பழங்குடியினர் மக்களிடையேயான பேச்சுவார்த்தை கூட்டம் ஆட்சியர் சமீரன் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் ஆட்சியர் பேசியதாவது:
கல்லார்குடி பகுதியில் அண்மையில் நில அளவீடு, வீடு ஒதுக்கீடு செய்தது ரத்து செய்யப்படுகிறது. ஓரிரு வாரங்களில் பொள்ளாச்சி சப்-கலெக்டர் தலைமையில் புதிதாக நில அளவை செய்யப்பட்டு போதுமான இடம் வழங்கப்படும். பழைய கல்லார்குடியில் இருந்தது போல் போதுமான இடம் தெப்பக்குளமேட்டில் ஒதுக்கீடு செய்யப்படும்.
இதில் பாதுகாப்பான முறையில் தனித்தனியாக வீடுகள் கட்டிக்கொள்ளலாம். இது தொடர்பாக சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உடனடியாக வீடுகள் கட்டிக் கொள்ளலாம். கல்லார்குடியில் தகுதி வாய்ந்த 5 குடும்பங்களுக்கு இடம், தெய்வ வழிபாடு, கலாச்சார முறைகளுக்கான பாரம்பரிய சடங்குகள் செய்வதற்கு போதுமான கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான இடங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு வழங்கப்படும்.
பட்டா வழங்கிய நிலங்களில் பாதுகாப்பான தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்படும். அழிவு நிலையில் உள்ள பழங்குடிகளை பாதுகாக்க முழுமையாக ஆய்வுகளும் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் வாழும் பழங்குடியின மக்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில் மாதம்தோறும் குறிப்பிட்ட நாளில் பழங்குடியினர் குறை கேட்புக் கூட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் கணேசன், மாவட்ட போலீஸ் எஸ்பி செல்வநாகரத்தினம், மாநில ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல உறுப்பினர் லீலாவதி தனராஜ், மாவட்ட பழங்குடியின நல அலுவலர் ராம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.